ஜகார்த்தா: இந்தோனீசியாவில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) திட்டத்தின்கீழ் அந்நாட்டு மத்திய வங்கியால் வழங்கப்பட்ட நிதியை அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறாகப் பயன்படுத்தி இருக்கலாம் என இந்தோனீசிய ஊழல் தடுப்பு ஆணையம் சந்தேகிக்கிறது.
இந்தோனீசிய ருப்பியா மதிப்பில் டிரில்லன் கணக்கில் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
“நாங்கள் டிரில்லியன் கணக்கான ருப்பியாவைப் பற்றி பேசுகிறோம். சரியான தொகை பின்னர் அறிவிக்கப்படும்,” என்று செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 21) இந்தோனீசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (கேபிகே) விசாரணை இயக்குநர் அசெப் குண்டூர் கூறினார்.
ஒரு டிரில்லியன் இந்தோனீசிய ருப்பியா என்பது 61.55 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குச் சமம்.
மத்திய வங்கியால் ஒதுக்கப்பட்ட நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதா அல்லது சிஎஸ்ஆர் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

