ஜகார்த்தா: அண்மையில் இந்தோனீசியாவின் ரியாவ் மாநிலத்திலும் தென் சுலாவேசியிலும் இரு தொடக்கப் பள்ளி மாணவர்கள் பகடிவதை எனப்படும் பள்ளி வன்முறைக்கு பலியாகினர்.
இந்தச் சம்பவம் அந்நாட்டின் பள்ளிகளில் பரவலாக நிகழும் அச்சமூட்டும் வன்முறையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது. மேலும் இது அரசு, மாணவர்கள் கல்வி கற்கும் சூழலை அமைதியாக வைத்திருக்கத் தவறியுள்ளதையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
கிறிஸ் தோப்பெல் புத்தார்புத்தார் என்ற எட்டு வயது மாணவன் கடந்த மே 26ஆம் தேதி மரணமடைந்தான். இவன் ரியாவ் மாநில அரசு தொடக்கப் பள்ளியில் பயின்று வந்தான் என்றும் பள்ளியில் மூத்த மாணவர்கள் தாக்கியதைத் தொடர்ந்து அவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
அந்தச் சிறுவன் மே மாதம் 20ஆம் தேதி தனது வீட்டிற்கு வந்ததும் காய்ச்சல், வயிற்று வலி இருப்பதாக தனது தந்தை கிம்சனிடம் கூறியுள்ளான். அவன் பள்ளியை விட்டு அன்று தனது சைக்கிள் சக்கரத்தை பள்ளியில் மூத்த மாணவர்கள் பழுதாக்கியதால் சீக்கிரமே வந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
“அவன் முதலில் தனக்கு எதனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்பதைத் தெரிவிக்கவில்லை. ஆனால், நான் அவனது நண்பர்களிடம் பேசியபோது, அவர்கள் பள்ளியில் மூத்த மாணவர்கள் நால்வர் அவனைத் தாக்கியதாக தெரிவித்தனர்,” என்று திரு கிம்சன் ஜூன் 8ஆம் தேதி விளக்கினார். பிறகு தமது மகனிடம் இது பற்றிக் கேட்டதற்கு அவனும் அதை உறுதிப்படுத்தியதாக திரு கிம்சன் கூறினார். அவனுடய சமயச் சார்பு, இனம் தொடர்பாக அவன் தாக்கப்பட்டதாக தனக்குத் தெரியவந்ததாக திரு கிம்சன் சொன்னார்.
தமது மகன் அதற்குப் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அங்கு அவனுக்கு வலிப்பு வந்து வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் கசிந்ததாக திரு கிம்சன் தெரிவித்தார். அவனது நிலைமை மோசமாகி பின்னர் அவன் மடிந்ததாக தந்தை கூறினார்.
இதன் தொடர்பில் திரு கிம்சன் 11க்கும் 13க்கும் இடைப்பட்ட ஐந்து மாணவர்களை சந்தேகத்தின்பேரில் காவல்துறையிடம் கைகாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் காவல்துறையினர் 22 சாட்சிகளை விசாரித்ததாக தற்பொழுது தெரியவந்துள்ளது.