ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகச் சந்தேகம்; ஆடவர் கைது

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகச் சந்தேகம்; ஆடவர் கைது

படம்: ராய்ட்டர்ஸ்

28 Feb 2026 - 1:11 pm

1 mins read

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அவர் பள்ளிவாசல்கள், காவல்துறை, நாடாளுமன்றக் கட்டடம் ஆகியவற்றைக் குறிவைத்துத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அது, மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி கூறினார்.

அந்த 20 வயது சந்தேக நபர், பெர்த் மாநிலத்திற்குக் கிட்டத்தட்ட 63 கிலோமீட்டர் வடக்கில் அமைந்துள்ள ‘பின்டூன்’ நகரைச் சேர்ந்தவர்.

பயங்கரவாதச் செயலை நடத்தத் திட்டமிட்டதாக அவர்மீது பின்னர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஆடவர் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் திட்டங்கள் குறித்து எழுதியிருந்ததாகவும் பள்ளிவாசல்கள், மேற்கு ஆஸ்திரேலியக் காவல்துறைத் தலைமையகம், நாடாளுமன்றக் கட்டடம் ஆகியவற்றைத் தாக்க எண்ணியதாகவும் காவல்துறை கூறியது.

“சந்தேக நபர் ஒருவர் பயங்கரவாதத் தாக்குதலின் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது,” என்று திரு அல்பனீசி தெரிவித்தார்.

“அந்த ஆடவர் காவல்துறை, நாடாளுமன்றம் மட்டுமல்லாமல், பள்ளிவாசல்களைத் தாக்குவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தைக் குறிவைக்கத் திட்டமிட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படுவது மிகவும் கவலை அளிக்கிறது,” என்றார் அவர்.

“சந்தேக நபர் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்,” என்றும் திரு அல்பனீசி கூறினார்.

குறிப்புச் சொற்கள்