சிங்கப்பூரில் கடன்முதலை நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் கைது

சிங்கப்பூரில் கடன்முதலை நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் கைது

2 mins read
d8307bc0-700f-4dd3-8a4b-84755691a527
சில கடன்முதலைகள் ஜோகூரைத் தளமாகக் கொண்டவர்கள் எனத் தெரிகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: சிங்கப்பூரில் கடன்முதலை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 35 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பொருள் விநியோகிப்பாளர்களும் அடங்குவர்.

சிங்கப்பூர் காவல் படையின் ஒத்துழைப்புடன் அவர்கள் கைது செய்யப்பட்டதாக மலேசிய காவல்துறை ஆணையர் முஹமட் காலித் இஸ்மாயில் வெள்ளிக் கிழமை அன்று தெரிவித்ததார்.

நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி) அண்மையில் வெளியிட்ட செய்தியில் சிங்கப்பூரில் பொருள்களை விநியோகிப்பதற்காக கடன்முதலைகளால் ஆள்சேர்ப்பு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அமலாக்க அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர்.

“சிங்கப்பூர் காவல்படையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையில் சிங்கப்பூரில் இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டனர்,” என்றார் முஹமட் காலித்.

மலேசி காவல்படையின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இது பற்றிய விவரங்களை அவர் வெளியிட்டதாக என்எஸ்டி தெரிவித்தது.

கடன்முதலைகளில் சிலர் ஜோகூரைத் தளமாகக் கொண்டவர்கள் என்று நம்பப்படுகிறது.

கடன் வாங்கிய பிறகு பணத்தை திரும்பச் செலுத்தாதவர்களுக்கு தொந்தரவுகளை ஏற்படுத்துவதற்காக விநியோகிப்பாளர்களை கடன்முதலைகள் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. டெலிகிராம் போன்ற தளங்கள் வழியாக அவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

சில சம்பவங்களில் கடன் வாங்கிய முஸ்லிம்களுக்கு பன்றி இறைச்சி அடங்கிய பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. இதனைப் பெற்றவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்ததால் விநியோகிப்பாளகள் கைது செய்யப்பட்டனர்.

இப்பணிகளை செய்வதற்காக சில விநியோகிப்பாளர்களுக்கு 100 வெள்ளி வரை வழங்கப்பட்டது.

கடன் வாங்கியோரின் வீட்டுமீது வண்ணச் சாயங்களை தெளித்தால் கண்காணிப்புக் கேமரா மூலம் சிக்கிவிடலாம் என்பதால் இந்தப் புதிய தந்திரத்தை கடன் முதலைகள் கையாண்டதாகச் சொல்லப்படுகிறது.

சிங்கப்பூர் சட்டப்படி, இதுபோன்ற விநியோகங்களில் ஈடுபடும் விநியோகிப்பாளர்கள்மீது சமயரீதியில் வெறுப்பைத் தூண்டியதாக அல்லது சட்டவிரோத கடன் நடவடிக்கைகள் ஈடுபட்டதாக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று என்எஸ்டி செய்தி சுட்டிக்காட்டியிருந்தது.

குறிப்புச் சொற்கள்