பசுமை விமான எரிபொருள் விலைகள் ஏறுமுகம்; உற்பத்தியில் தேக்கம்

பசுமை விமான எரிபொருள் விலைகள் ஏறுமுகம்; உற்பத்தியில் தேக்கம்

2 mins read
498aca6b-5313-41b3-bcfb-debb65aecdfd
டிசம்பர் 2025 முதல் நிலையான விமான எரிபொருள் உற்பத்தி தேக்கமடைந்துள்ள நிலையில் அனைத்துலக விமானத் தொழில் அமைப்பு இதன் தொடர்பில் கருத்துரைத்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ரியோ டி ஜெனிரோ: பசுமை விமான எரிபொருள் உற்பத்திச் செலவு வழக்கமான எரிபொருள் செலவுகளிலிருந்து வேறுபடுகிறது.

இருந்தபோதும், மத்திய கிழக்கு போருக்கு மத்தியில் விமான எரிபொருளின் விலைகளும் உயர்ந்திருப்பது  சிக்கலாக இருப்பதாக அனைத்துலக விமானத் தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் சனிக்கிழமை  (ஜூன் 6) நடைபெற்ற அனைத்துலக விமானத் தொழில் அமைப்பு (International Air Transport Association) பொதுக்கூட்டத்தில் அந்த அமைப்பின் எரிசக்தி மாற்றத் துறைக்கான இயக்குநர் ஹேமந்த் மிஸ்திரி, இதன் தொடர்பாகப் பேசினார்.

கரிம வெளியேற்றத்தைக் குறைக்க பசுமை விமான எரிபொருள் உதவும் என்பதால் அதன் உற்பத்திச் செலவு அதிகமாவதைத் தவிர்ப்பதற்கான வழியைக் கண்டுபிடிப்பது முக்கியம் என்று திரு மிஸ்திரி கூறினார்.

இத்தகைய எரிபொருள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் போன்ற கழிவுப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

அனைத்துலக விமானப் போக்குவரத்து சங்கத்தின்  அண்மைய தரவுகளின்படி,  மத்திய கிழக்கு மோதல் தொடங்குவதற்கு முன்பு  பிப்ரவரி மாதத்தில்  ஒரு மெட்ரிக் டன் பசுமை விமான எரிபொருளின் விலை  2,000 அமெரிக்க டாலராக ( 2,582 வெள்ளி) இருந்தது.

அந்த விலை மே மாதத்தில் ஏறத்தாழ 3,000 அமெரிக்க டாலருக்கு அதிகரித்துள்ளது.

டிசம்பர் 2025 முதல் நிலையான விமான எரிபொருள் உற்பத்தி தேக்கமடைந்துள்ள நிலையில் இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

 2026 ஆம் ஆண்டில் இதன் உற்பத்தி 2.4 மில்லியன் டன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விமான எரிபொருளுக்கான உலகளாவிய தேவையில் 1 விழுக்காட்டிற்கும் குறைவானதாகும்.

2026ல் பசுமை விமான எரிபொருளின் உலகளாவிய உற்பத்தித் திறன் ஒன்பது மில்லியன் டன்களாக விரிவுபடுத்தப்பட்ட போதிலும் ஏற்பட்டுள்ள இந்த நிலை, அது எவ்வளவு குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

தற்போதைய நிலைக்கு கொள்கைகளின் கட்டமைப்பும் ஓர் காரணம் எனச் சுட்டிக்காட்டிய சங்கத்தின் ஆராய்ச்சி மற்றும் திட்டங்களின் தலைவர் பிரீத்தி ஜெயின், பசுமை விமான எரிபொருளை விட வாகனங்களுக்கான புதுப்பிக்கத்தக்க டீசல் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறினார்.

முக்கியமாக வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகியவை மூலப்பொருள்களின் தட்டுப்பாடு, பசுமை விமான எரிபொருள் உற்பத்தியில் வளர்ச்சியை மெதுவடையச் செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்