7-லெவன் வணிகத்தை உருமாற்றிய சுசூகி காலமானார்

7-லெவன் வணிகத்தை உருமாற்றிய சுசூகி காலமானார்

1 mins read
1503c545-30ae-428a-868d-9de96e580911
1974ஆம் ஆண்டு ஜப்பானில் முதல் 24 மணிநேர 7-லெவன் கடையைத் திரு சுசூகி திறந்தார்.  - படங்கள்: ராய்ட்டர்ஸ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தோக்கியோ: 7-லெவன் (7-Eleven) கடைகளை உலகின் மாபெரும் அக்கம்பக்கக் கடைச் சங்கிலியாக உருவாக்கிய தோ‌ஷிஃபூமி சுசூகி காலமானார். அவருக்கு வயது 93.

இதயக் கோளாறு காரணமாக திரு சுசூகி மே 18ஆம் தேதி காலமானதாக 7-லெவன் நிறுவனம் திங்கட்கிழமை (மே 25) அறிக்கை வெளியிட்டது.

1974ஆம் ஆண்டு ஜப்பானில் முதல் 24 மணிநேர 7-லெவன் கடையைத் திரு சுசூகி திறந்தார். அந்தக் காலக்கட்டத்தில் ‘மாம் அண்ட் பாப்’ (mom-and-pop) கடைகள் ஜப்பானில் ஆதிக்கம் செலுத்தி வந்தன.

இந்நிலையில், 1990ஆம் ஆண்டு அமெரிக்க நிறுவனமான 7-லெவன், தான் நொடித்துப் போனதாக அறிவித்தது. அதையடுத்து, திரு சுசூகி அந்த நிறுவனத்தை வாங்கினார்.

அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக 7-லெவன் கடைகளை ஜப்பான் முழுவதும் திரு சுசூகி திறந்தார். பின்னர் மற்ற நாடுகளுக்கும் கிளை பரப்பினார்.

2016ஆம் ஆண்டு 7-லெவன் தலைமை நிறுவனத்தின் தலைவர், தலைமை நிர்வாகிப் பொறுப்பிலிருந்து திரு சுசூகி விலகியபோது, உலக அளவில் 16 நாடுகளில் 55,000க்கும் மேற்பட்ட கடைகளைத் திறந்திருந்தார்.

தற்போது உலக அளவில் 85,000க்கும் அதிகமான 7-லெவன் கடைகள் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட கால்பங்கு கடைகள் ஜப்பானில் உள்ளன.

குறிப்புச் சொற்கள்