ஸ்டாக்ஹோல்ம்: ஸ்வீடனில் 15 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படலாம். அதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
பதின்ம வயது பிள்ளைகள் அளவுக்கு அதிகமான இணையப் பயன்பாட்டை மேற்கொள்கின்றனர். அவற்றிலிருந்து அவர்களைக் காக்கும் விதமாகப் பல உலக நாடுகள் சமூக ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதில் இப்போது ஸ்வீடனும் இணைந்துள்ளது.
ஒரு தலைமுறையே கைப்பேசிக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்று ஸ்வீடனின் பொதுச் சுகாதார அமைச்சர் ஜோக்கப் ஃபிராஸ்மெட் தெரிவித்தார்.
ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக்டாக், யூ டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கணக்கைத் தொடங்க வேண்டுமானால் குறைந்தபட்ச வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று ஸ்வீடன் திட்டமிட்டுள்ளது. அதற்காகக் குழு ஒன்றையும் அது அமைத்துள்ளது.
குழுவின் பரிந்துரைப்படி புதிய நடைமுறை 2028ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடப்புக்கு வரக்கூடும்.

