தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அணுவாயுதப் பேச்சுவார்த்தை தோல்வி; ஈரானுக்கு எதிராக மீண்டும் தடைகள்

2 mins read
41248c21-8c91-4f38-b771-5fc03acb02f8
அணுவாயுதப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து மீண்டும் ஈரானுக்கு எதிராகப் பெருமளவில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

டெஹ்ரான்: மேற்கத்திய நாடுகளுடன் அணுவாயுதக் களைவு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து ஈரானுக்கு எதிராகப் பெருமளவிலான தடைகள் சனிக்கிழமை (செப்டம்பர் 27) மீண்டும் விதிக்கப்பட்டுள்ளன.

ஈரானுக்கு எதிராக கடந்த பத்தாண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தடைகள் கடைசி நிமிட அணுவாயுதப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து தற்பொழுது ஐநா அமைப்பு மீண்டும் தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்று மாதங்களுக்கு முன் அமெரிக்காவும் இஸ்ரேலும் அதன்மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது. இந்தத் தடைகள் ஈரானின் அணுவாயுத் திட்டத்தைக் குறிவைத்து விதிக்கப்பட்டாலும் அதன் தாக்கம் ஏற்கெனவே பொருளியல் சிரமத்தில் இருக்கும் ஈரானியப் பொருளியலிலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில் தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டாலும் பேச்சுவார்த்தை தீர்வுக்கு இன்னமும் வழி இருப்பதாக ஐரோப்பிய, அமெரிக்க அரசதந்திரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்துக் கருத்துரைத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ நல்லெண்ணத்துடன், நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி ஈரானை ஊக்குவித்தார்.

அத்துடன், ஈரான் தனது நன்மைக்காகவும் உலக நாடுகளின் பாதுகாப்புக்காகவும் நல்ல முடிவை எடுக்க அந்நாட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகத் தடைகளை உடனடியாக அமல் செய்யும்படி திரு ரூபியோ ஐநா உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.

இதன் தொடர்பில் ஈரான் அணுவாயுதங்களைப் பெறுவதைத் தடுக்கும் நோக்கில் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தையின் மூலம் அரசதந்திர தீர்வுகாண தொடர்ந்து முயற்சி செய்யப்போவதாக பிரிட்டிஷ், ஃபிரெஞ்சு, ஜெர்மனி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்தனர்.

அத்துடன், நிலைமை மோசமாகும் வகையில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என ஈரானை அந்நாடுகள் கேட்டுக்கொண்டன.

இந்நிலையில், ஈரான் தனது அணுவாயுதத் தளங்களைப் பார்வையிட ஐநா கண்காணிப்பாளர்களை அனுமதித்துள்ளது. ஆனால், செறிவூட்டப்பட்ட அனைத்து யுரேனியத்தையும் ஒப்படைத்தபோதும் அமெரிக்கா அதற்குப் பதிலாகச் சிறிதளவு சலுகையே அளித்திருப்பதாக ஈரான் கூறுகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்