டென்பசார்: இந்தோனீசியாவின் சுற்றுலாத் தீவான பாலியில் கடைப்பிடிக்கப்படும் புனிதமான இந்து சமய விடுமுறை தினத்தைச் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் இழிவுபடுத்தியுள்ளார்.
அக்குற்றத்திற்காக அவரைக் கைதுசெய்ததாக மார்ச் 22ஆம் தேதி அவ்வட்டாரக் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
லூசியன் ஆண்ட்ரின் ஸ்க்ராக் கென் எனும் அந்த ஆடவர்மீது இணையத்தளம் வாயிலாக வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகளைப் பரப்பியதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.
அவருக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பாலி காவல்துறை பேச்சாளர் அரியாசாண்டி கூறினார்.
பாலியின் மௌன தினம் எனக் குறிப்பிடப்படும் நியெபி பண்டிகை மார்ச் 19ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது.
அன்றைய தினம் தற்சிந்தனைக்காக உள்ளூர் மக்களும் சுற்றுப்பயணிகளும் வெளியில் செல்லாமல் 24 மணி நேரமும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்.
வேலை, பயணம், பொழுதுபோக்கு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.
மின்சாரத்தைப் பயன்படுத்துவதையும்கூட இந்தப் புனித நாளில் தவிர்க்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், தனது இன்ஸ்டகிராம் பதிவில் ‘நியெபி’ பண்டிகையை இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக கென்மீது புகார் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மார்ச் 21ஆம் தேதி அவர் கைதுசெய்யப்பட்டார்.

