சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது.
அதனால் விளையாட்டரங்கைச் சுற்றி ஆஸ்திரேலியக் காவல்துறையினர் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்னர் சிட்னியின் போண்டாய் கடற்கரையில் யூதர்களைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 15 பேர் மாண்டனர்; பலர் காயமடைந்தனர்.
டிசம்பர் 14ஆம் தேதி நடந்த அந்தத் தாக்குதல் ஆஸ்திரேலியாவையும் அதன் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், இதுபோன்று வேறு எந்தச் சம்பவங்களும் நடக்காமல் இருக்க சிட்னியில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
போண்டாய் கடற்கரையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது சிட்னி கிரிக்கெட் விளையாட்டு அரங்கம்.
தற்போது விளையாட்டு அரங்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கலகத் தடுப்புப் பிரிவு, குதிரைப் படை உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் சுற்றுக்காவலில் ஈடுபட்டுள்ளனர். குதிரைகளில் காவல் அதிகாரிகள் வலம் வருகின்றனர். மேலும் சில இடங்களில் துப்பாக்கி ஏந்திய அதிகாரிகளும் பணியில் உள்ளனர்.
“சில இடங்களில் துப்பாக்கியுடன் அதிகாரிகள் இருப்பார்கள். சில இடங்களில் சற்று அதிக எண்ணிக்கையில் காவல்துறை அதிகாரிகளைக் காணமுடியும்,” என்று நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் மல் லேன்யான் அறிக்கைமூலம் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஐந்து ஆட்டங்கள் கொண்ட ‘ஆஷஸ்’ டெஸ்ட் கிரிக்கெட் தொடர் உலகப் புகழ்பெற்றது.
தொடரின் கடைசி ஆட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் விளையாட்டு அரங்கத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 31ஆம் தேதி சிட்னி நகரின் பல்வேறு இடங்களில் கிட்டத்தட்ட 3,000 ஆயுதமேந்திய காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
புத்தாண்டை வரவேற்க சிட்னி நகரில் அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
போண்டாய் கடற்கரையில் நடக்கவிருந்த சில புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.

