புத்ராஜெயா: ‘அர்மடா’ நிதி தொடர்பான ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் அமைச்சர் சையது சாதிக் சையது அப்துல் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதை அந்நாட்டு கூட்டரசு நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
சையது சாதிக்கிற்கு விதிக்கப்பட்ட முந்தைய தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த கோரி அரசுத் தரப்பு தாக்கல் செய்திருந்த இறுதிக்கட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2023ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் இவருக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனையும் இரண்டு பிரம்படிகளையும் 10 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்திருந்தது. எனினும், 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த உத்தரவை ரத்து செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம், சையது சாதிக் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவரை விடுவித்தது. இதனை எதிர்த்து அரசுத் தரப்பு கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், திங்கட்கிழமை (ஜூலை 13) இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் குழு, அரசுத் தரப்பு மனுவில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அதனைத் தள்ளுபடி செய்து சையது சாதிக்கின் விடுதலையை உறுதி செய்தது.
இந்தத் தீர்ப்பின் மூலம் தனது ஆறு ஆண்டுகால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட மூவார் நாடாளுமன்ற உறுப்பினரான சையது சாதிக், மலேசிய நீதித்துறையின் சுதந்திரத் தன்மை மீது தனக்கிருந்த நம்பிக்கை மீண்டும் நிரூபணமாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
இக்கட்டான சூழ்நிலையிலும் தமக்கு ஆதரவாக இருந்த தனது குடும்பத்தினர், வருங்கால மனைவி பெல்லா அஸ்டிலா மற்றும் மூவார் தொகுதி மக்களுக்குத் தமது நன்றியை அவர் தெரிவித்துக்கொண்டார்.

