டமாஸ்கஸ்: கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது டிசம்பர் 1ஆம் தேதி அதிகாலை ரஷ்யாவும் சிரியாவும் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின.
சிரியாவின் வடமேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் குறைந்தது 25 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிரியாவின் அலெப்போ நகரைக் கிளர்ச்சியாளர் அமைப்பான ஹயாத் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பு அண்மையில் கைப்பற்றியது.
இந்த அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக சிரியா வகைப்படுத்தியுள்ளது.
சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து அலெப்போ நகரை அந்நாட்டுப் படைகள் இழந்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கிளர்ச்சியாளர்களை வீழ்த்தி, இழந்த பகுதிகளை மீட்போம் என்று சிரியா அதிபர் பஷார் அல் அசாத் சூளுரைத்துள்ளார்.
இது தொடர்பாக, நட்பு நாடுகளின் ஆதரவை அவர் நாடியுள்ளார்.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராஜ்சி சிரியாவின் தலைகர் டமாஸ்கசுக்கு டிசம்பர் 1ஆம் தேதியன்று பயணம் மேற்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
அங்கு அவர் அதிபர் அசாத்தைச் சந்தித்துப் பேசினார்.
சிரியா அரசாங்கத்துக்கும் ராணுவத்துக்கும் ஈரான் வலுவான ஆதரவை வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் நட்பு நாடுகளின் ஆதரவு மிகவும் முக்கியம் என்று திரு அராஜ்சியுடனான சந்திப்புக்குப் பிறகு அதிபர் அசாத் தெரிவித்தார்.
இதற்கிடையே, சில நாள்களுக்கு முன்பு கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட சில சிறு நகரங்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வந்துவிட்டதாக சிரியா ராணுவம் கூறியது.
சிரியா மற்றும் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் கூட்டம் அதிகமுள்ள குடியிருப்புப் பகுதி கடுமையாகச் சேதமடைந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதில் குறைந்தது ஏழு பேர் மாண்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் மீட்புப் பணியாளர்கள் கூறினர்.
பொதுமக்களைக் குறிவைக்கவில்லை என்றும் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருந்தனர் என்றும் சிரியாவும் ரஷ்யாவும் தெரிவித்தன.