தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிரியாவில் பல ஆண்டுகள் காணாத கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்

2 mins read
d3b5c049-584a-4b71-8584-6947e8e31dea
சிரியாவின் அலெப்போ நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைக்கு அருகே திரண்ட கிளர்ச்சியாளர்கள். - படம்: இபிஏ
multi-img1 of 2

அலெப்போ: சிரியாவில் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஹயாத் தாஹிர் அல்-‌ஷாம் (எச்டிசி) நடத்திய பெரிய அளவிலான தாக்குதலில் தங்களின் பல வீரர்கள் மாண்டுவிட்டதாக அந்நாட்டு ராணுவம் சனிக்கிழமையன்று (நவம்பர் 30) தெரிவித்தது.

அதன் காரணமாக சிரிய ராணுவப் படைகள் வேறு இடங்களுக்கு இடம் மாற்றப்படும் நிலை ஏற்பட்டது. கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகருக்குள் நுழைந்து நடத்திய தாக்குதல், சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத் பல ஆண்டுகளாக எதிர்கொள்ளாத சவாலாகப் பார்க்கப்படுகிறது.

சிரியாவின் ராணுவத்துக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மீது தங்கள் ஆகாயப் படை தாக்குதல்களை நடத்தியதாக ர‌ஷ்ய தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. ர‌ஷ்ய ஊடகங்கள் அத்தகவலை வெளியிட்டன.

நுஸ்ரா முன்னணி (Nusra Front) என முன்பு அழைக்கப்பட்ட எச்டிசி அமைப்பை, அமெரிக்கா, ர‌ஷ்யா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தியுள்ளன.

சிரியாவில் நிலைமையைக் கண்காணித்து வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் 2020ஆம் ஆண்டிலிருந்து போர் பெரும்பாலும் தணிந்திருந்தது.

2011ல் தொடங்கிய அப்போரில் நூறாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுவிட்டனர். போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் இடம்பெறவில்லை.

எனினும், சில ஆண்டுகளுக்கு முன்பு திரு அசாத்தின் அரசாங்கம் சிரியாவின் பெரும்பாலான இடங்களையும் முக்கிய நகரங்களையும் தங்கள்வசம் கொண்டுவர ஈரானும் ர‌ஷ்யாவும் உதவியதைத் தொடர்ந்து அங்கு சண்டை முடிவுக்கு வந்தது.

அலெப்போ நகரை 2016ஆம் ஆண்டில் சிரியா அரசாங்கம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதிலிருந்து அந்நகரம் அரசாங்கத்தின் பிடியில்தான் இருந்து வந்தது. அந்நிகழ்வு போரின் முக்கியத் திருப்புமுனைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது.

கிளர்ச்சியாளர்கள் படையெடுத்து வருவதை ஒப்புக்கொண்ட சிரிய ராணுவம், அலெப்போவின் பெரும்பாலான பகுதிகளுக்குள் அவர்கள் நுழைந்துவிட்டதாகத் தெரிவித்தது.

பயங்கரவாதிகள் அதிக எண்ணிக்கையில், பல்வேறு திசைகளிலிருந்தும் தாக்குதல் நடத்தியதாகவும் ராணுவம் குறிப்பிட்டது.

அலெப்போ விமான நிலையத்தைத் தங்கள்வசம் கொண்டு வந்ததாக கிளர்ச்சியாளர்கள் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் அத்தகவலை வெளியிட்டார்.

குறிப்புச் சொற்கள்