சிரியாவின் இடைக்காலப் பிரதமராக முகமது அல் பஷீர் தேர்வு

2 mins read
8abaad58-e642-4556-b21d-0fec57686241
சிரியாவின் இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள முகமது அல் பஷீர். - படம்: ராய்ட்டர்ஸ்

டமாஸ்கஸ்: சிரியாவில் அதிபர் பதவியிலிருந்து பஷார் அல்-அசாத் கிளர்ச்சியாளர்களால் தூக்கி எறியப்பட்டார். தமது குடும்பத்தினருடன் ரஷ்யாவில் அவர் தஞ்சமடைந்துள்ளார்.

அவர் நாட்டைவிட்டு வெளியேறிய பின்னர், புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கிளர்ச்சிக் கூட்டணி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அவர்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக சிரியாவின் இடைக்கால பிரதமராக முகமது அல் பஷீரைத் தேர்வு செய்துள்ளனர்.

அடுத்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி வரை திரு பஷீர், பிரதமர் பதவியிலிருந்து சிரியாவில் அமைக்கப்படும் இடைக்கால அரசை வழிநடத்துவார் எனக் கிளர்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறினர்.

“தேசத்தில் நிலைத்தன்மை, அமைதி ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கான நேரம் இது,” என சிரியாவின் இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் முகமது அல் பஷீர் செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 10) தெரிவித்தார்.

சிரியாவில் அமையவிருக்கும் புதிய அரசுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அரசியல் செயல்முறை போன்றவற்றை உள்ளடக்கிய சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உலக நாடுகள் அனைத்தும் ஆதரவு வழங்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கேட்டுகொண்டார்.

சிரியாவின் எதிர்கால அரசாங்கம் நம்பகத்தன்மை நிறைந்ததாக இருக்க வேண்டும் எனத் திரு பிளிங்கன் கூறினார்.

அமையவிருக்கும் அரசு, சிறுபான்மையினரின் உரிமைகளை முழுமையாக மதிக்க வேண்டும் என்றும் மனிதநேய உதவிகளை ஏற்றுகொண்டு அதனை மக்களிடம் கொண்டுசேர்க்க உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிரியாவை பயங்கரவாதத்தின் தளமாக பயன்படுத்துவதைப் புதிய அரசாங்கம் தடுக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்