பெய்ரூட்: சிரியாவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கிளர்ச்சிப் படைகளின் தலைவர், நாட்டில் உள்ள எல்லா எதிர்த்தரப்பு ஆயுதக் குழுக்களும் கலைக்கப்படும் என்று அறிவித்து உள்ளதாக சிரியாவின் அரசாங்க ஊடகம் தெரிவித்து உள்ளது.
திரு அகமது அல்-ஷாரா எனப்படும் அவர், கிளர்ச்சிப் போராளிகள் அனைவரும் தற்காப்பு அமைச்சு அதிகாரத்தின்கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
இருப்பினும், இந்த நடவடிக்கை எப்போது, எப்படி இடம்பெறும் என்பது பற்றியோ ஆயுதம் ஏந்திய குழுக்கள் அவரது அழைப்புக்கு கட்டுப்படுவார்களா என்பது பற்றியோ தெளிவான தகவல் இல்லை.
முன்பு அபு முகம்மது அல்-கொலானி என அழைக்கப்பட்ட திரு அல்-ஷாரா, “எல்லாருமே இனி சட்டத்திற்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்,” என்று கூறியதாக சானா (Sana) எனப்படும் அரசாங்க செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
சிரியாவின் அதிபர் பொறுப்பில் இருந்து பஷார் அல்-அசாத் துரத்தப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேல் ஆன நிலையில் திரு அல்-ஷாராவின் கருத்துகள் வெளிவந்து உள்ளன.
13 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த நிலையில், சிரியா தலைநகர் டமாஸ்கஸில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றுள்ளது.
தொடர்ந்து, நாட்டில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் பணிகளில் புதிய நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
அதற்காக ஐரோப்பா, ஐக்கிய நாடுகள் மன்றம், மத்திய கிழக்கு போன்றவற்றைச் சேர்ந்த பேராளர்களை சிரியா ஆட்சியாளர்கள் தொடர்ந்து சந்தித்துப் பேசி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
சிரியாவுக்கு அனைத்துலக அங்கீகாரம் பெறும் நோக்கிலும் அந்தச் சந்திப்புகளை அவர்கள் நடத்தி வருகிறார்கள்.
வட்டார நாடுகளும் தொடர்ந்து சிரியாவைக் கட்டுப்படுத்தி செல்வாக்கு பெறுவதில் கவனம் செலுத்தி வருகின்றன.
அந்த வகையில், அசாத் அரசாங்கம் கவிழ்ந்த பின்னர் சிரியாவின் தென்மேற்கு வட்டாரத்தில் தனது ராணுவம் கைப்பற்றிய பகுதிகளுக்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) வருகையளித்தார்.
இஸ்ரேலின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தனது ராணுவம் ஹெர்மன் மலைப்பகுதியில் தொடர்ந்து நிலைகொண்டு இருக்கும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலின் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்சும் அவருடன் அங்கு சென்று இருந்தார்.