டமாஸ்கஸ்: சிரியாவில் புதிய அரசாங்கத்தை நிறுவுவதற்கான பணிகளில் கிளர்ச்சிப் படை ஈடுபட்டு வருகிறது.
அதிபர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பஷார் அல்-அசாத் நாட்டைவிட்டு வெளியேறிய பின்னர், அடுத்து என்ன நடக்கும் என்பதை சிரியா மக்களும் உலக நாடுகளும் உற்றுநோக்கி வரும் நிலையில் அங்கு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளில் கிளர்ச்சிக் கூட்டணி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
திங்கட்கிழமை பின்னேரத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்பு மன்றம் சிரியா நிலவரம் தொடர்பில் ரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தியது.
12 நாள்கள் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து சண்டையிட்டு அதிபர் அசாத்தை மின்னல் வேகத்தில் பதவியில் இருந்து துரத்தியது இன்னும் தங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்று அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பேராளர்கள் கூறினர்.
அதிபர் அசாத்தை நீக்கியதன் மூலம் சிரியாவில் 13 ஆண்டு காலமாக நடப்பில் இருந்த உள்நாட்டுப் போர் ஒரு முடிவை எட்டி உள்ளது.
அந்தப் போர், நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது.
பேராளர்கள் உட்பட பாதுகாப்பு மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வியப்பில் உள்ளோம். நிலைமை எந்த அளவுக்கு முன்னேறுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்,” என்று ரஷ்யாவுக்கான ஐநா தூதர் வாசிலி நேபென்ஸியா செய்தியாளர்களிடம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அசாத்தின் அரசாங்கத்திற்கு ரஷ்யா பேருதவி புரிந்து வந்தது. கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போரிட அவருக்குத் தேவையான உதவிகளை மாஸ்கோ செய்து வந்தது.
கிளர்ச்சியாளர்களிடம் அடிபணிந்த அசாத், தம்மை ஆதரிக்கும் ரஷ்யாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) தப்பி ஓடினார். மாஸ்கோவில் அவர் தமது குடும்பத்துடன் தஞ்சம் புகுந்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில், அசாத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரஷ்யா புகலிடம் அளித்துள்ளதாக, ரஷ்ய அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் குறிப்பிட்டன.
சிரியாவில் அவரது குடும்பம் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக கொடுங்கோல் ஆட்சி புரிந்தது.
அசாத் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதை சிரியா மக்கள் பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். தலைநகர் டமாஸ்கஸ் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதற்கிடையே, அசாத் நாட்டைவிட்டு ஓடியதால் அரசாங்கத்தைக் கிளர்ச்சியாளர்களிடம் ஒப்படைக்க சிரியா பிரதமர் முகம்மது ஜலாலி திங்கட்கிழமை முன்வந்தார்.
தலைநகர் டமாஸ்கஸில் கிளர்ச்சிப் படைத் தலைவர் அபு முகமது அல்-கோலானியை அவரும் துணை அதிபர் ஃபைசல் மெக்தாத்தும் சந்தித்து, அரசாங்க ஒப்படைப்பு தொடர்பாக பேச்சு நடத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குக் கிடைத்த தகவல் தெரிவித்தது.

