கோலாலம்பூர்: முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பேணிப் பாதுகாக்கும் வகையில், 1995ஆம் ஆண்டின் தபூங் ஹாஜி சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிறுவனங்களின் நிர்வாக நடைமுறைகளை வலுப்படுத்துவதோடு, அவற்றின் பலவீனங்களைத் தீர்க்கமான முறையில் எதிர்கொள்வதே ‘மடானி’ அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாகவே தபூங் ஹாஜி சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதேவேளையில், மாணவர்களின் குரல்களை ஒடுக்கும் வகையிலான புதிய சட்டங்கள் எதுவும் இயற்றப்படாமல், 1971ஆம் ஆண்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டம் முற்றிலுமாகக் கைவிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் வேறுபாடுகள் இன்றி அனைத்து மாநில மக்களுக்கும் உரிய முறையில் நன்மைகள் சென்றடைவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றார் திரு அன்வார். எதிர்க்கட்சியினர் ஆட்சி செய்யும் மாநிலங்களில் வாழும் மக்களையும் அரவணைத்துச் செல்வது அரசாங்கத்தின் கடமையாகும் என்று அவர் உறுதி அளித்தார்.
கெஅடிலான் (பிகேஆர்) கட்சி தனது சீர்திருத்தக் கொள்கைகளிலிருந்து சிறிதும் விலகாது என்று தெரிவித்த பிரதமர் அன்வார், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காகத் தங்களின் லட்சியங்களையும் நீதியையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று பிகேஆர் தேசிய மாநாட்டின் நிறைவில் அக்கட்சியின் தலைவருமான பிரதமர் அன்வார் தெளிவுபடுத்தினார்.


