தைப்பே: போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக தைவானைப் பிரதிநிதித்து வத்திகன் நகருக்குச் சென்றுள்ள தூதர் சென் சியென் ஜென், மற்ற நாட்டுத் தலைவர்களுடன் அளவளாவும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார்.
சீனா உரிமை கொண்டாடும் தைவானுடன் அரசதந்திர உறவுகளை முறைப்படி கடைப்பிடித்துவரும் வெறும் 12 நாடுகளில் வத்திகனும் ஒன்று. ஆனால், தைவானிய அதிபர் லாய் சிங் தே, போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை. மாறாக, முன்னாள் துணை அதிபர் சென் சியென் ஜென்னை அவர் அனுப்பியுள்ளார். பக்தியுடைய கத்தோலிக்கரான திரு சென், பலமுறை வத்திகனுக்குச் சென்றுள்ளார்.
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் உலகத் தலைவர்களில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோனும் அடங்குவர்.
இறுதிச்சடங்கில் பங்கேற்கும் தலைவர்களுடன் சிறந்த உரையாடல்களை நடத்த தம்மால் முடிந்ததை செய்யப்போவதாக திரு சென் கூறியுள்ளார்.
இந்தப் பயணத்தில் திரு சென்னுடன் துணை வெளியுறவு அமைச்சர் ஃபிரான்குவா வூ சென்றுள்ளார். தைவானின் ஆகச் செல்வாக்குமிக்க அரசதந்திரிகளில் ஒருவராக அவர் விளங்குகிறார்.

