தைனான், தைவான்: வாஷிங்டனில் அமெரிக்க, சீனத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில், திட்டமிட்டபடி ஆயுத விற்பனையைச் செயல்படுத்துவதை ஊக்குவிக்க அமெரிக்காவுடன் தைவான் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்கப்போவதாக தைவான் தற்காப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் புதன்கிழமை (செப்டம்பர் 23) தெரிவித்துள்ளார்.
ஜனநாயக முறையில் ஆட்சி செய்யப்படும் தைவானைத் தனது சொந்தப் பிரதேசமாகச் சீனா கருதுகிறது. மேலும், தைவானுக்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனையை நிறுத்துமாறு அது பலமுறை கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடந்த டிசம்பரில் தைவானுக்கு இதுவரை இல்லாத மிகப்பெரிய அளவில் 11 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இருந்தபோதும், கடந்த மே மாதம் பெய்ஜிங்கிற்குப் பயணம் மேற்கொண்டபிறகு, கிட்டத்தட்ட 14 பில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டாவது திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வாரம் வாஷிங்டனில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசும்போது, தைவானுக்கான ஆயுத விற்பனையை நிறுத்துமாறு சீன அதிபர் ஸி ஜின்பிங் டிரம்ப்பைக் கேட்டுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு தைவானின் தாய்னானில் நடைபெற்ற செய்தியாளர் பயணத்தின்போது ஊடகங்களிடம் பேசிய தைவான் தற்காப்பு அமைச்சின் துணைப் பேச்சாளர் சியாவ் ஃபூ-சுன், இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் கட்டிக்காப்பது ஜனநாயக நாடுகளுக்குள்ள பொதுவான விருப்பம் என்று கூறினார்.
