தைப்பே: வரும் 2025ஆம் ஆண்டுக்கான தற்காப்புச் செலவினத்தை 7.7 விழுக்காடு அதிகரிக்கவிருப்பதாகத் தைவானிய அமைச்சரவை ஆகஸ்ட் 22ஆம் தேதி தெரிவித்துள்ளது.
எதிர்பார்க்கப்படும் பொருளியல் வளர்ச்சியைவிட அது அதிகம் எனக் கூறப்பட்டது.
சீனாவின் மிரட்டலை எதிர்கொள்ளும் விதமாகத் தற்காப்பை வலுப்படுத்த, கூடுதலான போர் விமானங்களையும் ஏவுகணைகளையும் தைவான் வாங்குகிறது.
தைவான் சீனாவின் ஓர் அங்கம் என்கிறது பெய்ஜிங். கடந்த ஐந்து ஆண்டுகளில் தைவான் மீதான ராணுவ, அரசியல் நெருக்குதலை அது அதிகரித்து வந்துள்ளது.
ஆனால் சீனா அவ்வாறு உரிமை கோருவதைத் தைவான் நிராகரிக்கிறது.
அடுத்த ஆண்டுக்கான தற்காப்புச் செலவினத்தை NT$ 647 பில்லியனாக (S$26.4 பில்லியன்) உயர்த்தவிருப்பதாகத் தைவானிய அமைச்சரவை அதன் வாராந்தரக் கூட்டத்திற்குப்பின் தெரிவித்தது.
தைவானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது 2.45 விழுக்காடு. முன்னர் தற்காப்புச் செலவினத்திற்கு 2.38 விழுக்காட்டுத் தொகை ஒதுக்கப்பட்டது.
அடுத்த ஆண்டுக்கான பொருளியல் வளர்ச்சி 3.26 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது தைவான். ஆனால் அதைவிட அதிகமான தொகையைத் தற்காப்புச் செலவிற்கு ஒதுக்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தைவானின் தற்காப்புச் செலவு நிலையான வேகத்தில் அதிகரிப்பதாக அதன் தற்காப்பு அமைச்சின் செலவினக் கட்டுப்பாட்டு அலுவலகத் தலைவர் சியெ சி சியென் செய்தியாளர்களிடம் கூறினார்.
“மற்ற நாடுகளுடன் ஆயுதப் போட்டா போட்டியில் தைவான் ஈடுபடாது. நமது தேவைகளுக்கு ஏற்ப நிலையான வேகத்தில் தற்காப்புச் செலவுகளை அதிகரிப்போம்,” என்றார் அவர்.