தைப்பே: அமெரிக்காவுடன் அந்நாட்டின் வரி விதிப்பு தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11ஆம் தேதி) தைவான் துவக்கியது.
இதை தைவானிய அரசாங்கம் சனிக்கிழமை (ஏப்ரல் 12ஆம் தேதி) தெரிவித்தது.
தைவான் பகுதி மின்கடத்தி தயாரிப்பில் மிகப் பெரிய நாடாக விளங்குகிறது. இதனால் அமெரிக்கா விதித்துள்ள 32 விழுக்காடு வரி நியாயமற்றது என்று அது கூறியுள்ளது. எனினும், வரியற்ற வர்த்தகம், கூடுதலாக அமெரிக்கப் பொருள்களை வாங்குவது, அமெரிக்காவில் முதலீடுகளை அதிகரிப்பது என விரைவாக வர்த்தக உடன்பாடு பேச்சுவார்த்தையில் முந்தியது.
இது பற்றிக் குறிப்பிட்ட தைவானின் வர்த்தக பேச்சுவார்த்தை அலுவலகம், அமெரிக்க அதிகாரிகளுடன் தான் காணொளி வழி பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தது. ஆனால், போச்சுவார்த்தையில் பங்கேற்ற அமெரிக்க அதிகாரிகளை அது பெயர் குறிப்பிடவில்லை.
அந்தப் பேச்சுவார்த்தையில், இருநாட்டு வரிகள், மற்ற வர்த்தகத் தடைகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உட்பட ஏனைய பொருளியல், வர்த்தகப் பிரச்சினைகள் இடம்பெற்றதாக அந்த அலுவலகம் தெரிவித்தது.
“கூடிய விரைவில் இருதரப்பும் மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளன. அதன்மூலம் இரு நாடுகளும் வலுவான, நிலையான பொருளியல், வர்த்தக உறவு முறையை உருவாக்கும் விதமாக செயல்பட்டு வருகின்றன,” என்று அந்த அலுவலகம் விளக்கமளித்தது.