மோசடி: தைவானில் 25 பேர் கைது, $190 மில்லியன் பறிமுதல்

2 mins read
856939b3-c508-496f-9150-070aaab92cb9
கம்போடியத் தலைநகர் நோம்பென்னில் உள்ள பிரின்ஸ் வங்கிக் கிளை. - படம்: ஏஎஃப்பி

தைப்பே: கம்போடிய வர்த்தகர் சென் சிக்குச் சொந்தமான, அனைத்துலக மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டை எதிர்நோக்கும் பிரின்ஸ் குழுமத்துடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின்பேரில் 25 பேரைத் தைவான் கைதுசெய்துள்ளது.

அத்துடன், $190 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தைவானிய அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) செய்தி வெளியிட்டுள்ளது.

விலையுயர்ந்த 26 சொகுசுக் கார்கள், வங்கிக் கணக்குகள் என அக்குழுமம் சார்ந்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவையனைத்தும் கள்ளப் பணப்பரிமாற்றம், சட்டத்துக்கு எதிராக பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் செய்த மோசடிகள் போன்ற குற்றங்கள்மூலம் பெறப்பட்டவை என்று வழக்கறிஞர்கள் அறிக்கை ஒன்றில் விவரித்தனர்.

கம்போடியாவின் பல பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட சட்டவிரோத ‘கட்டாய ஊழியர்கள்’ முகாம்களில் மின்னிலக்க நாணயப் பரிவர்த்தனை, இணையச் சூதாட்டம் போன்ற நடவடிக்கைகளின் வழியாக பெரிய அளவில் முதலீட்டு மோசடிகள் நடந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“செயல்பாட்டில் இல்லாத நிறுவனங்களுக்கு மோசடியில் கிடைத்த நிதிகள் பிரின்ஸ் குழுமத்தால் மாற்றிவிடப்பட்டுள்ளன. அதனைக்கொண்டு ஆடம்பரப் பொருள்களும் சொத்து முதலீடுகளும் செய்யப்பட்டு, குற்றத்தால் விளைந்த செல்வங்கள் மறைக்கப்பட்டன,” என்று அறிக்கை தெரிவித்தது.

இதுகுறித்துக் கருத்தறிவதற்காக முயன்றும் வர்த்தகர் சென் சியையோ அவரது பிரதிநிதியையோ தொடர்புகொள்ள முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

கடத்தப்பட்ட ஊழியர்களைக் கொண்டு பேரளவில் இணைய மோசடிகளை நிகழ்த்தியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, தென்கிழக்காசியாவை மையமாகக் கொண்ட பிரின்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்காவும் பிரிட்டனும் அண்மையில் தடைவிதித்தன. கடந்த அக்டோபரில், சிங்கப்பூரில் இயங்கிய அந்நிறுவனத்தின் $150 மில்லியனுக்கும் மேற்பட்ட சொத்துகள் காவல்துறையால் முடக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்