தைப்பே: தைவானிய வெளியுறவு அமைச்சர் லின் சியா-லுங் அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் நடைபெறும் தைவான்-டெக்சஸ் ‘ஏஐ’ உச்சநிலை மாநாட்டில் உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவரது அலுவலகம் செவ்வாய்க்கிழமை (மே 6) வெளியிட்ட அறிக்கையில் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதும் அவரது பயணத்தின் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலீட்டைப் பெருக்கவும் வரிவிதிப்பு மிரட்டல்களைச் சமாளிக்கவும் தைவான் எண்ணம் கொண்டுள்ளது.
முன்னதாக, தைவானிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்கா 32 விழுக்காடு வரி விதித்தது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வரி விதிப்பு 90 நாள்களுக்கு நிறுத்தப்படுவதாக ஏப்ரலில் அறிவித்தார்.
அமெரிக்காவுடன் வரி தொடர்பான பேச்சுகளைத் தொடங்கியுள்ளது தைவான். கூடுதலான அமெரிக்கப் பொருள்களை வாங்கவும் அங்குக் கூடுதலாக முதலீடு செய்யவும் தைவான் உறுதியளித்துள்ளது.
அமைச்சர் லின், மே 9ஆம் தேதி நடைபெறும் தைவான்-டெக்சஸ் ‘ஏஐ’ உச்சநிலை மாநாட்டில் உரையாற்றுவார் என்று தைவானிய வெளியுறவு அமைச்சு கூறியது. அவருடன் தொழில்துறைப் பேராளர்களும் அமெரிக்கா செல்கின்றனர். தைவான் மின்சார, மின்னணுப் பொருள்கள் உற்பத்தியாளர் சங்கத்தினரும் அவர்களில் அடங்குவர்.
தைவானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்துவதற்கான தைவானிய அதிபர் லாய் சிங்-டேயின் திட்டத்தை எடுத்துரைப்பதும் அமெரிக்காவில் தைவானிய முதலீட்டுக்கு உதவுவதும் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் என்று அமைச்சு கூறியது.
தைவான் சீனாவின் ஓர் அங்கம் என்று சீனா கூறிவரும் நிலையில், தைவானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அதிகாரபூர்வ அரசதந்திர உறவுகள் கிடையாது. இருப்பினும் அமெரிக்கா தைவானின் முக்கிய அனைத்துலக ஆதரவு நாடாக விளங்குவதுடன் ஆயுதங்களையும் விநியோகிக்கிறது.