தோக்கியோ: ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி அமைச்சரவை மாற்றத்தின் மூலம் தமது அரசாங்கத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்த முயன்றபோதிலும் அந்த அரசாங்கம் உறுதியுடன் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 17) நடைபெற்ற ஓர் எளிமையான அமைச்சரவை மாற்றத்தின்போது திருவாட்டி தக்காய்ச்சி, எட்டு முக்கிய அமைச்சர்களைத் தக்கவைத்துக் கொண்டார்.
அவர்களில் தற்காப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோரும் அடங்குவர்.
வெளிநாட்டு அதிகாரிகளுடன் தனிப்பட்ட நல்லுறவை வளர்ப்பது அல்லது முக்கிய கொள்கை முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வது போன்ற பணிகளைத் தங்கள் பதவிகளில் கொண்டிருப்பதால் அந்த எட்டுப் பேரும் பதவியில் தக்கவைக்கப்பட்டனர் என்று திருவாட்டி தக்காய்ச்சி செய்தியாளர்களிடம் கூறினார்.
இருப்பினும், ஜப்பானின் அதிகம் வாசிக்கப்படும் நாளிதழான பழமைவாத யோமியூரி ஷிம்பன், இந்த மாற்றங்கள் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
நிலைகுலைந்த நிலையில் நிற்கும் ஒரு நிர்வாகம் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவதையே அமைச்சரவை மாற்றம் உணர்த்துவதாக அது குறிப்பிட்டுள்ளது.
ஆளும் சுதந்திர ஜனநாயகக் கட்சி இன்னும் ஓராண்டில் தலைமைப் போட்டிக்குத் தயாராகி வருகிறது.
இந்நிலையில், 65 வயதான திருவாட்டி தக்காய்ச்சி, தாம் தேர்ந்தெடுத்த தலைவர்களுக்கும் வரவிருக்கும் தேர்தலுக்கும் சற்றும் சம்பந்தமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
