தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘எண்ண முடிந்த அளவு எடுத்துக்கொள்ளுங்கள்’: போனசை அள்ளித் தந்த நிறுவனம் (காணொளி)

2 mins read
fb6e9d32-4acf-4185-94bc-a165060c2a35
நீண்ட மேசையில் பரப்பி வைக்கப்பட்டுள்ள போனஸ் பணம். - படம்: எக்ஸ் / சைனா ஃபேக்ட்

பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த பாரந்தூக்கி நிறுவனம் ஒன்று ஆண்டிறுதி போனசாகத் தன் ஊழியர்களுக்கு 11 மில்லியன் யுவானை (S$2.07 மில்லியன், ரூ.70 கோடி) வழங்கியது.

ஆனால், ஒரே ஒரு நிபந்தனையையும் அது விதித்தது. ஊழியர்கள் தங்களால் எவ்வளவு பணத்தை எண்ண முடியுமோ அதனை மட்டும் எடுத்துச் செல்லலாம் என்பதே அந்நிபந்தனை.

ஹீனன் மைனிங் கிரேன் கம்பெனி லிமிடெட் என்ற அந்நிறுவனம் போனஸ் தொகையை ஒரு நீள்மேசைமீது பரப்பி வைத்தது.

ஒவ்வோர் ஊழியர்க்கும் அதிகபட்சம் 15 நிமிடங்கள் வழங்கப்பட்டு, அதற்குள் அவர்கள் எண்ணிய தொகையை எடுத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்த காணொளி டோயின், வெய்போ போன்ற சீனச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, பின்னர் மற்ற சமூக ஊடகங்களிலும் பரவியது.

ஊழியர்கள் பணத்தை எண்ணி எடுப்பதை அக்காணொளியில் காண முடிந்தது. ஊழியர் ஒருவர் 15 நிமிடங்களில் 100,000 யுவானை (S$18,840) எண்ணி, அள்ளிச் சென்றார்.

இணையவாசிகளிடமிருந்து இந்நடவடிக்கைக்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

நிறுவனத்தின் தாராள குணத்தைச் சிலர் பாராட்டினர். வேறு சிலர் நிறுவனத்தின் அணுகுமுறை குறித்துக் கேள்வியெழுப்பினர்.

இது முன்மாதிரியாகவும் பிரம்மாண்டமாகவும் உள்ளது என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

இன்னொருவர், “இந்தக் கோமாளித்தனத்திற்குப் பதிலாக ஊழியர்களின் வங்கிக் கணக்கிலேயே பணத்தைச் செலுத்தி இருக்கலாம். இது ஒருவகையில் அவமதிப்பதுபோல் உள்ளது,” என்று பதிவிட்டுள்ளார்.

ஹீனன் நிறுவனம் இப்படித் தாராளமாக போனஸ் வழங்குவது இது முதன்முறையன்று. கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த நிறுவனத்தின் வருடாந்தர விருந்து நிகழ்வின்போது ஊழியர்களுக்குக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான அளவிற்கு போனஸ் வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்