மலாக்கா: சாலைப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த படகுச் சேவை

1 mins read
28d25717-4903-44ae-b507-c143bc048b23
படம்: பெர்னாமா -

மலேசியாவின் மலாக்கா மாநில அரசு, அங்கு நிலவி வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் புதியதொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சாலைகளில் பொதுப் போக்குவரத்துகளில் செல்வோர், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் தாங்கள் செல்லும் இடத்திற்கு வெகுவிரைவில் செல்வதற்கு ஆற்றில் செல்லும் 'வாட்டர் டாக்சி' என்றழைக்கப்படும் படகுச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் சுங்கை மலாக்காவின் இயற்கைக் காட்சிகளை ரசித்துக்கொண்டே பயணிகள் தங்கள் பயண நேரத்தை இனிதாகக் கழிக்கலாம்.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, மலாக்கா குடியிருப்பாளர்களை 'வாட்டர் டாக்சி' சேவையைப் பயன்படுத்துமாறு அம்மாநில அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது.

முதற்கட்டமாக, தடாரன் பெங்கலன் ராமா என்ற பகுதியில் இருந்து ஆற்றின் முகத்துவாரம் வரையிலான நீர்வழிப்பாதையில் இரண்டு படகுச் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மலாக்கா ஆறு, கடற்கரை மேம்பாட்டு ஆணையம் இந்தச் சேவையை இயக்கி வருகிறது. மேலும் ஏராளமான 'வாட்டர் டாக்சிகள்' பயணிகளுக்காக சேவையாற்ற உள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரு படகுத்துறையில் இருந்து இன்னொரு படகுத்துறைக்குச் செல்வதற்கான பயணச் சீட்டின் விலை 1 ரிங்கிட்.

அனைத்துப் படகுத்துறைகளுக்கும் செல்ல ஆகும் செலவு 8 ரிங்கிட் மட்டுமே என்று அந்த ஆணையத்தின் தலைமை நிர்வாகி முராட் ஹுசின் தெரிவித்தார்.

இந்தச் சேவையின் இரண்டாம் கட்டத்தில் வாட்டர் டாக்சி சேவை பத்து ஹம்பார் வரை நீட்டிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்