ஜெனிவா: தலிபான் அமைப்பு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் பெண்கள், குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவன மனித உரிமை நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
சில நேரங்களில் அவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை நிராகரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்டுப்பாடுகளின்படி, நோய்வாய்ப்பட்ட அல்லது காயமடைந்த பெண்கள் குறிப்பிட்ட ஆடைகளை அணிந்துசெல்லவேண்டும்; ஆண் காப்பாளர் உடன் செல்லவேண்டும்; ஆண் மருத்துவர்களிடமிருந்து சிகிச்சை பெறவேண்டும் என்று ரிச்சர்ட் பென்னட் எனும் அந்த நிபுணர் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.
ஆண் காப்பாளருடன் செல்லாத பெண்களுக்கு அவசர மருத்துவச் சேவை நிராகரிக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனித உரிமை மன்றத்திடம் அவர் இவ்வாரம் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார்.
ஆண் காப்பாளருடன் செல்லாததால், ஒரு கர்ப்பிணி மருத்துவமனை நுழைவாயிலிலேயே குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்றொரு பெண் தனது நான்கு வயது மகனை இழந்தார். மருத்துவமனைக்கு அவனுடன் தனியாகச் செல்ல முடியாததே அதற்குக் காரணம்.
“தலிபான் அமைப்பின் கட்டுப்பாடுகள் மாறவேண்டும். இல்லாவிடில், அவர்கள் மக்களைக் கொன்றுவிடுவார்கள்,” என்றார் பென்னட்.
தொடர்புடைய செய்திகள்
தமது அறிக்கையைத் தலிபான்களுடன் பகிர்ந்துகொண்டு கருத்துக் கேட்டதாக பென்னட் கூறினார். இருப்பினும், அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
கடந்த 2021ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, தலிபான் அமைப்பு, பெண்கள் தொடக்கப்பள்ளிக்குப் பிறகு கல்வி கற்கத் தடை விதித்துள்ளது.
அது, பெண்களின் நடமாட்டத்திற்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சென்ற ஆண்டு நிலவரப்படி, ஆப்கானிஸ்தானின் மருத்துவ ஊழியர்களில் கால்வாசிப்பேர் பெண்களாக இருந்தனர். இருப்பினும், அவர்களின் மருத்துவக் கல்விக்கு விதிக்கப்பட்ட தடையால், எதிர்காலத்தில் குறைவான பெண்களே அத்துறையில் இருக்கமுடியும் என்று பென்னட் கூறினார்.
அது, முற்றிலும் நியாயமற்ற கொள்கை என்றார் அவர். அதன் காரணமாக ஒட்டுமொத்தச் சுகாதார முறையும் பாதிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

