கோலாலம்பூர்: பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இணைவது குறித்த பேச்சுவார்த்தை என்ற கூற்றைப் பெர்சத்து மறுப்பதோடு அந்த வதந்திகள் அர்த்தமற்றவை எனக் கூறுகிறது.
பெர்சத்து, பக்காத்தான் ஆகியவற்றுக்கு இடையேயான எந்தவோர் ஒத்துழைப்பும் எந்தவொரு கட்சி மேடையிலோ அல்லது கூட்டத்திலோ ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என்று பெர்சத்து தகவல் பிரிவுத் தலைவர் ஃபைசல் இஸ்மாயில் அஸீஸ் வலியுறுத்தியுள்ளார்.
அதன் அடிப்படையில், பெர்சத்து கட்சியின் தலைமைச் செயலாளர் முகமது அஸ்மின் அலி பெர்சத்து கட்சி, பக்கத்தான் கூட்டணியில் இணையும் என்ற கூற்றுகள் முற்றிலும் உண்மையற்றவை என்று ஃபைசல் கூறினார்.
14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தைக் கவிழ்க்க உதவிய கட்சிகளில் பெர்சத்துவும் ஒன்று என்பதைக் குறிப்பிட்ட அவர், அத்தகைய ஒத்துழைப்பு தர்க்கரீதியற்றது என்றும் விவரித்தார்.
இது அரசியல் குழுவிலோ, உச்ச தலைமைத்துவக் குழுவிலோ, அல்லது கட்சிக்குள் நடந்த எந்தவோர் அதிகாரபூர்வமற்ற கலந்துரையாடல்களிலோ ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என்றார் அவர்.
அதே நேரத்தில், தற்போது பக்கத்தான் ஹரப்பானுடன் ஒத்துழைத்து வரும் அம்னோவின் அணுகுமுறையை பெர்சத்து கட்சி பின்பற்றவில்லை என்று ஃபைசல் கூறினார்.
பெர்சத்துவின் அண்மைய ஒழுங்கு நடவடிக்கைகளில் முன்னாள் சிலாங்கூர் முதல் அமைச்சருக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் அத்தகைய விஷயங்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன என்றும் கூறி, அவர் அஸ்மினைப் பாதுகாத்துப் பேசினார்.

