இரண்டு நாள்களில் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கலாம்: அதிபர் டிரம்ப்

இரண்டு நாள்களில் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கலாம்: அதிபர் டிரம்ப்

2 mins read
அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்ற செய்தி வர்த்தகச் சந்தைகளைச் சாந்தமடையச் செய்து, எண்ணெய் விலை சற்று குறைந்தது
3fb91a41-c6f6-41d6-90f4-2c42fb8fc5ef
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்காவும் ஈரானும் மத்திய கிழக்கு அமைதிக்கான பேச்சுவார்த்தை அடுத்த இரண்டு நாள்களில் பாகிஸ்தானில் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) ஊடக நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.

அதேசமயம், அமெரிக்க, ஈரான் குழுவினர் இவ்வாரப் பிற்பகுதியில் பாகிஸ்தான் திரும்பக்கூடும் என்று வளைகுடா நாடுகள், பாகிஸ்தான், ஈரான் ஆகியவற்றின் அதிகாரிகள் கூறினர். ஆனால், அதற்கு எந்தத் தேதியும் நிர்ணயிக்கப்படவில்லை என்று ஈரானியத் தகவல்கள் தெரிவித்தன.

கடந்த வார இறுதியில் இருநாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

அமெரிக்கா விதித்த அணுவாயுதத் தயாரிப்புக்கான கட்டுப்பாடு, ஹோர்முஸ் நீரிணையை உலக நாடுகளுக்குத் திறப்பது போன்ற முக்கிய நிபந்தனைகளை அப்போது ஈரான் ஏற்றுக்கொள்ளவில்லை. முடக்கிவைக்கப்பட்டுள்ள அதன் சொத்துகளை விடுவிக்க ஈரான் முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் அந்த நீரிணையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்போவதாக அறிவித்து, அரேபிய வளைகுடாவில் இயங்கும் ஈரானின் துறைமுகங்களுக்கு வந்து செல்லும் கப்பல்களுக்குத் தடை விதித்தது. அந்நடவடிக்கை ஈரானுக்குக் கடுங்கோபத்தை ஏற்படுத்தியது.

“இன்னும் இரண்டு நாள்களுக்குள் ஏதாவது நடக்கும் சாத்தியம் உள்ளது. நாங்கள் வருவதற்கு திட்டமிடுகிறோம், நீங்கள் அங்கேயே இருங்கள்,” என்று நியூயார்க் போஸ்ட் ஊடகத்துக்கு நேர்காணல் வழங்கும்போது அதிபர் டிரம்ப் கூறினார்.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்ற செய்தி வெளிவந்ததும், வர்த்தகச் சந்தைகள் சாந்தமடைந்தன. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு S$127.14க்கும் (US$100) குறைவாகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்