கோலாலம்பூர்: மலேசியாவில் பிற சமய நிகழ்வுகளில் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கான வழிகாட்டிகளை வரைவது குறித்து அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நாட்டுப் பிரதமர் அலுவலகத்தின் சமய விவகாரப் பிரிவுக்கான அமைச்சர் முகம்மது நயிம் மொக்தார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடைபெற்றுவரும் சந்திப்புகளில் மாநில இஸ்லாமிய சமய மன்றங்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதோடு, அதன் தொடர்பிலான பரிந்துரைகள் எதிர்வரும் தேசிய இஸ்லாமிய சமய விவகார மன்றத்தின் (எம்கேஐ) முஸாக்காரா குழுவின் 126வது சந்திப்பில் கலந்துபேசப்படும் என்றும் அவர் கூறினார்.
“எம்கேஐ முஸாக்காரா குழுவின் முடிவு, பேராக் மன்னரின் தலைமையில் நடைபெறவுள்ள எம்கேஐ சந்திப்பில் முன்வைக்கப்படும்,” என்று டாக்டர் முகம்மது நயிம் புதன்கிழமை (பிப்ரவரி 5) இரவு அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த வகையில், பரிந்துரைக்கப்படவிருக்கும் வழிகாட்டிகள் தொடர்பில் கருத்துவேறுபாடுகளை ஏற்படுத்தவோ விமர்சிக்கவோ வேண்டாம் என்று அவர் சம்பந்தப்பட்டோரிடம் கேட்டுக்கொண்டார். சமய நிகழ்வுகள் ஒழுங்காக நடைபெறுவதையும் அவை தேசிய நல்லிணக்கத்துக்குப் பங்காற்றுவதை உறுதிப்படுத்துவதும் அவர்களின் பொறுப்பு என்பதே அதற்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
பிற சமய வழிபாட்டு இடங்களில் முஸ்லிம்களுக்கான புதிய வழிகாட்டிகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று டாக்டர் முகம்மது நயிம் புதன்கிழமையன்று நாடாளுமன்ற இணையத்தளத்தில் எழுத்து வடிவில் குறிப்பிட்டிருந்தார். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டிருந்தால் சமய அமைப்பு அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறவேண்டும் என்ற விதிமுறை, அந்நிகழ்ச்சிகளில் முஸ்லிம்களின் நம்பிக்கைகள் தொடர்பில் அவர்களைப் புண்படுத்தும் அம்சங்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்வது போன்றவை வழிகாட்டிகளில் அடங்கும் என்று மலாய் மெயில் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மலேசியாவின் பல்வேறு சமயங்களைச் சேர்ந்த சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வழிகாட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக டாக்டர் முகம்மது நயிம் விவரித்தார். மதிக்கத்த வகையில் முஸ்லிம்கள், பிற சமயக் கொண்டாட்டங்களிலும் சடங்குகளிலும் கலந்துகொள்வதற்கும் நல்ல நடத்தையைக் கடைப்பிடிக்கவும் அவர்கள் இஸ்லாமிய சமயத்தின் கொள்கைகளை நிலைநாட்டுவதற்கும் புதிய வழிகாட்டிகள் வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டினார்.

