ஈரானுடன் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும்: டிரம்ப்

ஈரானுடன் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும்: டிரம்ப்

2 mins read
079c613d-c6cd-44fc-be38-e231416a58f5
டெஹ்ரானில் உள்ள ஆசாதி சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா வானூர்தி. - படம்: ஏஎஃப்பி

கெய்ரோ: ஈரானுடன் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) பிற்பகலில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், ஆனால் உடன்பாடு எட்டுவதற்கு எவ்விதக் கெடுவும் விதிக்கப்படவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்கவும் ஈரானின் அணுவாயுத அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவரவும் தாக்குதலைத் தவிர்த்து, ஒப்பந்தத்தை விரைவாக மேற்கொள்ளுமாறு ஈரானிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நியூஜெர்சியிலிருந்து வாஷிங்டன் திரும்பியபோது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மக்களைக் கொல்லத் தாம் விரும்பாததால் உடன்பாடு காண விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி பிற்பகுதியில் ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய போரின் காரணமாக, எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பொருளியல் நெருக்கடிகள் எழுந்துள்ளன. இதனால் போரை முடிவுக்குக் கொண்டுவர திரு டிரம்ப்புக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது. போரின் பாதிப்புகள் வளைகுடா, செங்கடல், எகிப்து வரை பரவியுள்ளன.

திங்கட்கிழமை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை 4 விழுக்காட்டிற்குமேல் குறைந்தது.

இதனிடையே, சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான், பாகிஸ்தானிய ராணுவத் தளபதி ஆசிம் முனீர் இருவருடன் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி தொலைபேசியில் ஆலோசித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக ஓமானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், புதிய கடல்வழிப் பாதை தொடர்பான ஆலோசனைகள், ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதுடன் தொடர்புடையவையல்ல என்று ஈரானிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பாகே தெளிவுபடுத்தியுள்ளார்.

அதேவேளையில், ஈரானின் அணுவாயுதத் திட்டத்தைக் கட்டுப்படுத்த அனைத்து வழிகளையும் திரு டிரம்ப்பும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் செவ்வாய்க்கிழமை ஆலோசித்துள்ளனர்.

அமெரிக்காவுடன் நெருங்கிய பாதுகாப்பும் உளவுத்துறை ஒருங்கிணைப்பும் நிலவுவதாகக் குறிப்பிட்ட இஸ்ரேலிய எரிசக்தி அமைச்சர் ஏலி கோஹன், ஈரான் மீண்டும் அணுவாயுதத் திட்டத்தையோ கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உற்பத்தியையோ தொடங்கினால் நிச்சயம் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார். எனினும், தாம் அணுவாயுதம் தயாரிக்க முயலவில்லை என்று ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
டோனல்ட் டிரம்ப்ஈரான்அமெரிக்கா