பிரஸ்ஸல்ஸ்: உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ரஷ்யாவை ஈடுபடுத்துவது குறித்து உக்ரேனின் முக்கிய ஐரோப்பிய நட்பு நாடுகள் அந்நாட்டுடன் இணைந்து திட்டங்களை வகுத்து வருகின்றன.
கள நிலவரம் மாறி வருவது, உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் கை ஓங்குவதைக் காட்டுவதாக அந்நாடுகள் கருதுகின்றன.
ஐரோப்பாவின் மூன்று முக்கியப் பொருளியல்களான ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் அதிகாரிகள், இருதரப்பையும் உள்ளடக்கிய அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசித்து வருவதாக இந்த விவகாரத்தை நன்கறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து உக்ரேனிய அதிகாரிகளுடனும் விவாதித்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரிகள் கூறினர்.
அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையிலும், போர்க்களத்தில் நிலவும் முட்டுக்கட்டைக்கு மத்தியில் ரஷ்யப் படைகள் தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்து வரும் நிலையிலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்த இதுவே தகுந்த தருணம் என அம்மூன்று நாடுகளும் கருதுகின்றன.
குளிர்காலம் தொடங்கியதும் உக்ரேனில் பொதுமக்கள், மின்சாரக் கட்டமைப்பு வசதிகள் மீதான தாக்குதல்களை ரஷ்யா மீண்டும் தீவிரப்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனால் இப்போதே பேச்சுவார்த்தையைத் தொடங்குவதன் மூலம் போர்ச் சூழலைத் தவிர்க்க நட்பு நாடுகள் இலக்கு கொண்டுள்ளன.
இருப்பினும், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் அதிபர் ஸெலென்ஸ்கியிடம் உள்ளது என்பதையும் அவர் உடன்படாத எந்தவொரு திட்டத்தையும் ஏற்குமாறு ஐரோப்பிய நாடுகள் அவர்மீது அழுத்தம் தராது என்பதையும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் வரும் நாள்களில் ஜெர்மானியப் பிரதமருடனும் பிரெஞ்சு அதிபருடனும் இவ்விவகாரம் தொடர்பாக கலந்தாலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

