தமிழ்ப் பள்ளிகள் மூடப்படமாட்டா: மலேசியக் கல்வி அமைச்சர்

தமிழ்ப் பள்ளிகள் மூடப்படமாட்டா: மலேசியக் கல்வி அமைச்சர்

2 mins read
a85ee731-878b-42f0-a153-baed943fc9b6
தேசிய வகை சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளிக்கான நில அகழ்வுச் சடங்கு. - படம்: வோங் கா வோ / ஃபேஸ்புக்
Google News Preferred Icon

பெட்டாலிங் ஜெயா: பிரதமர் அன்வார் இப்ராகிமின் ‘மதானி’ அரசாங்கத்தின்கீழ் மலேசியாவில் தேசிய வகைத் தமிழ்ப் பள்ளிகள் (எஸ்ஜேகேடி) மூடப்படமாட்டா என்று அந்நாட்டின் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

மாறாக, எல்லாப் பள்ளிகளையும் மேம்படுத்துவதிலும் அவற்றை நன்கு பராமரிப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். ஆசிரியர்களையும் மாணவர்களையும் மேம்படுத்துவதற்கான திட்டங்களிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்களிடையே கருத்து

“தமிழ்ப் பள்ளிகள் மூடப்படும் என்ற கருத்து இன்னும் பொதுமக்கள் சிலரிடையே நிலவுகிறது. அதனால்தான் இதை நான் வலியுறுத்தவேண்டியுள்ளது,” என்று திருவாட்டி ஃபட்லினா குறிப்பிட்டார்.

“எந்த தமிழ்ப் பள்ளியும் மூடப்படாது என்று உறுதியளிக்கிறோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் சொன்னார். பினாங்கில் நிபோங் தெபால் பகுதியில் சுங்கை பக்காப் பள்ளிக்கான நில அகழ்வுச் சடங்கில் கலந்துகொண்டபோது அவர் பேசினார்.

நிபோங் தெபால் நாடாளுமன்ற உறுப்பினரான ஃபத்லினா, மேம்பாடு, ஆசிரியர்களையும் மாணவர்களையும் மேம்படுத்தும் திட்டங்கள் போன்ற அம்சங்களில் எல்லாப் பள்ளிகள்மீதும் கவனம் செலுத்தப்படுவதை அரசாங்கம் உறுதிசெய்யும் என்று சொன்னார்.

‘இந்திய சமூகம் ஒதுக்கப்படாது’

‘மதானி’ அரசாங்கத்தின் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இந்திய சமூகம் ஒதுக்கப்படாது என்று திரு அன்வார் இப்ராகிம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) கூறியிருந்தார். இந்த விவகாரம், இந்திய சமூகத் தலைவர்களுடன் பல தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றின் மூலம் கையாளப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத் திட்டத்தின் முன்னேற்றத்தைப் பரிசீலிக்கவும் சமூகத் தலைவர்களின் கருத்துகள், கவலைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளவும் அந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், குடும்பங்கள் எதிர்கொள்ளும் பாரத்தைக் குறைக்கவும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் கல்வி, சொந்தத் தொழில் தொடங்கும் போக்கு, நலன், நிதி ஆதரவு போன்றவற்றில் பல்வேறு முயற்சிகள் ஒன்று திரட்டப்பட்டுள்ளதாகவும் திரு அன்வார் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாகல்விதமிழ்அன்வார் இப்ராகிம்கல்வி அமைச்சுபள்ளிசடங்குஆசிரியர்கள்மாணவர்கள்குடும்பம்