தென்கொரியமீதான வரி 25 விழுக்காட்டுக்கு உயரும்: அமெரிக்கா

தென்கொரியமீதான வரி 25 விழுக்காட்டுக்கு உயரும்: அமெரிக்கா

2 mins read
1fe71f12-9881-433b-b4a5-ec19f3ff594c
தென்கொரிய இறக்குமதிமீதுள்ள வரிகளை 15 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காட்டுக்கு உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். - படம்: புளூம்பர்க்

வா‌ஷிங்டன்: அமெரிக்கக அதிபர் டோனல்ட் டிரம்ப், தென்கொரியாவிலிருந்து இறக்குமதியாகும் வாகனங்கள், மரக்கட்டை, மருந்துப் பொருள்கள் ஆகியவற்றின்மீதான வரிகளை 25 விழுக்காட்டுக்கு அதிகரிக்கப்போவதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்காவுடன் செய்துகொண்ட வர்த்தக உடன்பாட்டை தென்கொரிய அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டதாக அவர் குறைகூறினார்.

“தென்கொரிய அரசாங்கம் அமெரிக்காவுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை,” என்று திரு டிரம்ப் தமது சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார்.

வரலாற்றுபூர்வ வர்த்தக உடன்பாட்டைத் தென்கொரிய அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதால் தென்கொரியாமீதான வரிகளை 15 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காட்டுக்கு உயர்த்துவதாகத் திரு டிரம்ப் அறிவித்தார்.

திரு டிரம்ப் அறிவித்துள்ள வரி உயர்வு எப்போது நடப்புக்குவரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

திரு டிரம்ப்பின் அறிவிப்பை அடுத்து தென்கொரியாவின் கோஸ்பி (KOSPI) பங்குச் சந்தைக் குறியீடு 0.7 விழுக்காடு சரிந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான தென்கொரியாவின் வொன் நாணய மதிப்பு 0.5 விழுக்காடு குறைந்தது.

இதற்கிடையே, கனடாவுக்குச் சென்றிருக்கும் தென்கொரிய வர்த்தக அமைச்சர் கிம் ஜுங் குவான் அமெரிக்காவுக்குக் கூடிய விரைவில் சென்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லியுட்னிக்கைச் சந்திக்கவிருப்பதாகத் தென்கொரிய அதிபர் அலுவலகம் குறிப்பிட்டது.

திரு கிம், இம்மாதம் 28ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதிவரை அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது.

மேலும் அமெரிக்காவின் வரி உயர்வு குறித்து அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை என்றது தென்கொரியா.

இருப்பினும், மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிக்க தென்கொரிய அதிபரின் ஆலோசகர், சம்பந்தப்பட்ட அமைச்சுகளைச் சந்திக்கவிருக்கிறார்.

திரு டிரம்ப் வரியை உயர்த்துவது குறித்து இதற்குமுன் மிரட்டல் விடுத்திருந்தார். ஒருசில நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரி உயர்வை அவர் தள்ளிப்போட்டார். வேறு சில நாடுகளுக்கான கூடுதல் வரியை அவர் அமல்படுத்தவில்லை.

குறிப்புச் சொற்கள்