வாஷிங்டன்: அமெரிக்காவுக்குள் நுழையும் மேசை, நாற்காலி, படுக்கை போன்ற அறைகலன்கள் பற்றி தமது நிர்வாகம் வரிவிதிப்பு தொடர்பான விசாரணையில் ஈடுபடும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
அவர் இது தொடர்பாக தமது ‘டுரூத் சோஷியல்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
“பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் அறைகலன்களுக்கு வரி விதிக்கப்படும். அது எத்தனை விழுக்காடு என்று இன்னும் தீர்மானிக்கப்படவில்லை,” என்று அவர் அதில் குறிப்பிட்டு உள்ளார். அறைகலன்கள் இறக்குமதி பற்றிய விசாரணை அடுத்த 50 நாள்களுக்குள் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திரு டிரம்ப் அவ்வாறு அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்காவின் அறைகலன் வர்த்தக நிறுவனங்களின் பங்குகள் வெகுவாகச் சரிந்தன.
குறிப்பாக ‘ரெஸ்டொரேஷன் ஹார்ட்வேர்’ என்று முன்னர் அழைக்கப்பட்ட ‘ஆர்எச்’ நிறுவனத்தின் பங்குகள் மட்டும் 7.5 விழுக்காடு வீழ்ந்தன.
“பிற நாடுகளின் அறைகலன்களுக்கு வரி விதிப்பதன் மூலம் வடகெரோலினா, தென் கெரோலினா, மிச்சிகன் மற்றும் இதர மாநிலங்களின் அறைகலன் வர்த்தகத்தை மீட்டெடுக்கலாம்,” என்றும் திரு டிரம்ப் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா கடந்த ஆண்டு US$25.5 பில்லியன் (S$33 பில்லியன்) மதிப்புள்ள அறைகலன் தயாரிப்புகளை இறக்குமதி செய்தது.
அது 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் 7 விழுக்காடு அதிகம்.
தொடர்புடைய செய்திகள்
மொத்த அறைகலன் இறக்குமதியில் ஏறத்தாழ 60 விழுக்காடு பொருள்கள் சீனாவிலிருந்தும் வியட்னாமில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன. ‘ஃபர்னிச்சர் டுடே’ என்னும் வர்த்தக சஞ்சிகை இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளது.
அதேநேரம் அமெரிக்காவுக்குள் தயாரிக்கப்படும் அறைகலன் தயாரிப்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
25 ஆண்டுகளுக்கு முன்னர், 2000ஆம் ஆண்டில் 681,000ஆக இருந்த அந்த எண்ணிக்கை தற்போது 340,000 என பாதியாகச் சரிந்துவிட்டது. அமெரிக்க அரசாங்கப் புள்ளிவிவரங்கள் இதனைக் குறிப்பிடுகின்றன.

