பெட்டாலிங் ஜெயா: மலேசியர்களுக்குப் பிடித்தமான பானமாகவும் இனம் மற்றும் கலாசாரத்தைக் கடந்த ஒற்றுமையின் அடையாளமாகவும் ‘தே தாரிக்’ எனப்படும் பாரம்பரியத் தேநீர் இன்னமும் தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இருப்பினும், இளம் தலைமுறையினரின் மாறிவரும் பழக்கவழக்கங்கள், தேநீர்த் துறையில் அதிவேக மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.
மலேசியாவில் தேநீரே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், இளையர்கள் தற்போது உயர்தர தேநீர், வீடுகளிலேயே தேநீர் தயாரிப்பது, நவீன பாணியிலான 'புதிய தேநீர்ப் பானங்கள்’ ஆகியவற்றின் பக்கம் அதிகமாக ஈர்க்கப்பட்டு வருகின்றனர் என்று மலேசியத் தேநீர்ச் சங்கத் துணைத் தலைவர் லியூ சூன் காங் கூறினார்.
பாலினம், இனம், சமயம், சமூகப் பின்னணிகளைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைக்கும் மலேசியாவின் பாரம்பரியமிக்க தேநீர்க் கலாசாரங்களில் ஒன்றாக தேநீர் உள்ளதை அவர் சுட்டினார்.
மலேசியப் புள்ளிவிவரத் துறையின் தரவுகளை மேற்கோள் காட்டிய அவர், உள்ளூரில் அருந்தப்படும் தேநீரில் ஏறக்குறைய 80 விழுக்காடு, பால் மற்றும் சர்க்கரை கலந்த தேநீர் வகை என்றார். சீனத் தேநீரும் இதர தேநீர் வகைகளும் மீதமுள்ள 20 விழுக்காட்டுப் பங்கை வகிப்பதாக அவர் சொன்னார்.
சாலையோரக் கடைகளையும் ‘மாமாக்’ கடைகளையும் தாண்டி, தற்போது பெரிய உணவகங்கள், வணிக வளாகங்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் பரிமாறப்படும் அளவிற்குத் தேநீர் வளர்ச்சி கண்டுள்ளது என்று திரு லியூ குறிப்பிட்டார்.
இருப்பினும், கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு மக்களின் விருப்பங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிய அவர், அதிகமானோர் வீடுகளிலேயே தேநீர் தயாரிப்பதையும் உயர் வகை உதிரித் தேயிலைகளைப் பயன்படுத்துவதையும் விரும்புவதாக அவர் கூறினார்.
மலேசியாவில் எஞ்சியிருக்கும் மூன்று முக்கியத் தேயிலைத் தோட்டங்களான கேமரன் மலையில் உள்ள ‘போ பிளான்டேஷன்ஸ்’, ‘பாரத் டீ பிளான்டேஷன்ஸ்’, கினபாலு மலைக்கு அருகில் உள்ள ‘சாபா டீ’ ஆகியவற்றின் மூலம் ஆண்டுதோறும் ஏறத்தாழ 3.2 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்யப்படுவதாக திரு லியூ தெரிவித்தார்.

