கூண்டுக்குள் மாணவரை அடைத்து வைத்தார் ஆசிரியர்; வருத்தத்தில் பெற்றோர்

கூண்டுக்குள் மாணவரை அடைத்து வைத்தார் ஆசிரியர்; வருத்தத்தில் பெற்றோர்

2 mins read
ef51143e-145d-4ea9-86f3-b227014708b7
7 வயது சிறுவன் ஒழுங்கான நடத்தை இல்லாத காரணத்தால் கூண்டு ஒன்றில் அடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. - படம்: அஸுவான் அப்துல் கஃபர் ஃபேஸ்புக்

மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர் தற்காலிக உலோகக் கூண்டில் தொடக்கப்பள்ளி மாணவர்களை அடைத்துவைப்பதாகக் கூறப்படுகிறது.

தம்மை திரு அஸுவான் என்று மட்டும் அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவர், சம்பவம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டார். ஒழுங்கான நடத்தை இல்லாத காரணத்தால் ஒரு 7 வயது சிறுவன் கூண்டில் அடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஜூன் 27ஆம் தேதியன்று ரெம்பாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் தம் மகனின் நண்பனுக்கு இந்நிலை நேர்ந்ததாக திரு அஸுவான் குறிப்பிட்டிருந்தார்.

“பெற்றோர், ஆசிரியர்களுடனான வாட்ஸ்அப் உரையாடல் குழுவில், அந்தச் சிறுவன் வகுப்பின்போது விளையாடிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அமைதியாக இல்லாத அந்தச் சிறுவன், நண்பர்களைத் தொந்தரவு செய்துகொண்டு அவர்களின் கால்சட்டைகளை இழுத்துக்கொண்டு இருந்ததாகவும் கூறப்பட்டது,” என்று திரு அஸுவான் ‘எம்ஸ்டார்’ செய்தியிடம் கூறினார்.

தங்களின் மகனை வகுப்பு நண்பர்களிடமிருந்து தனிமைப்படுத்தும் வகையில் அந்தக் கூண்டில் அடைத்துவைத்தது உண்மையா என்று பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் அந்த உரையாடலின்போது கேட்டிருந்தனர்.

அதற்கு அந்த ஆசிரியரும், “ஆமாம் சார், நான் அவரை அதில் வைத்தேன்,” என்று பதிலளித்திருந்தார்.

தவறான நடத்தைக்காக எந்தப் பிள்ளையும் கூண்டில் அடைக்கப்பட்டு தண்டிக்கப்படக்கூடாது என்று திரு அஸுவான் வலியுறுத்தினார்.

முதலாம் ஆண்டு மாணவரான அந்தச் சிறுவனைக் கூண்டில் அடைத்தது பொறுப்பற்ற செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தண்டனைக்குப் பயன்படுத்தப்பட்ட அந்தக் கூண்டில் மின்சாரக் கட்டமைப்புப் பெட்டி ஒன்றும் இருந்ததாக நம்பப்படுகிறது.

உலோகக் கூண்டு ஒன்றில் பிள்ளைகளை அடைப்பதுடன் அதில் ஒரு ‘ஃபியுஸ் பாக்ஸ்’ இருப்பதும் ஆபத்தானது. பிள்ளைகள் அதைத் தொட்டால் என்ன ஆகும். இது என் பிள்ளைக்கு நடந்தால் நான் மிகவும் ஆத்திரமடைவேன். இதை மாவட்டக் கல்வி அலுவலகத்திடம் புகார் செய்வேன்,” என்றார் திரு அஸுவான்.

இந்தச் சம்பவத்தை அடுத்து தம்முடைய மகன் பள்ளிக்குச் செல்லும் உற்சாகத்தை இழந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தம் மகன் இத்தகைய தண்டனைக்கு ஆளாகவில்லை என்றாலும் வகுப்பு நண்பர்கள் கூண்டில் அடைக்கப்பட்டு பார்த்ததை அடுத்து பள்ளி செல்லும் உற்சாகத்தைத் தம் மகன் இழந்திருக்கலாம் என்றார் திரு அஸுவான்.

இந்நிலையில் ரெம்பாவ் கல்வி அலுவலகத்திடம் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக எம்ஸ்டாரிடம் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்