நிபோங் திபால்: சில நேரங்களில் சிறு செயலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
அவ்வகையில், மாணவச் செல்வங்களிடம் தாம் காட்டிய கனிவால் ஏராளமான மக்களை ஈர்த்துள்ளார் மலேசியாவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர்.
திருவாட்டி ஜனோராஷிகின் ஜஸ்டி, 39, என்ற அவர், காற்பந்து விளையாட்டின்போது பசியுடன் இருந்த ஒரு சிறுவனுக்கு உணவூட்டினார். அவரது இந்த அன்புள்ளம், மலேசியர் பலரின் நெஞ்சங்களைக் கொள்ளைகொண்டது.
பினாங்கின் சுங்கை ஜாவியிலுள்ள ஜாவி தோட்டத் தமிழ்ப் பள்ளியில் பாலர்பள்ளி மாணவர் நிர்வாக உதவியாளாராகப் பணியாற்றி வருகிறார் திருவாட்டி ஜனோரா.
டிசம்பர் 7ஆம் தேதியன்று அப்பள்ளியில் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான காற்பந்துப் போட்டி நடந்தது. அப்போட்டித் தொடரில் ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி இரண்டாமிடம் பிடித்தது.
ஆட்டத்திற்கு இடையே பசியுடன் வந்த இந்தியச் சிறுவனுக்கு உணவூட்டினார் மலாய்ப் பெண்ணான ஜனோரா. உணவு சூடாக இருந்தபோதும் தம் வாயால் ஊதி ஊதி சூட்டைத் தணித்து, அவர் உணவூட்டியது தாயின் அன்பை நினைவுபடுத்துவதாக இருந்தது.
“எல்லாம் தன்னிச்சையாகத்தான் நடந்தது. ஆட்ட இடைவேளையின்போது குறைந்த நேரமே இருந்ததால் அவன் விரைவாக உண்டு முடிக்க வேண்டும் என விரும்பினேன். எனது செயல் இத்தனை நேர்மறையாகப் பார்க்கப்பட்டு, இவ்வளவு பரவலாகும் என எதிர்பார்க்கவில்லை,” என்றார் திருவாட்டி ஜனோரா.
அவரது இந்த கனிவான செயலை அங்கிருந்த பெற்றோர் ஒருவர் படமாகப் பதிவுசெய்து, அதனை டிக்டாக் தளத்தில் வெளியிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மாலையில் ஜனோரா வீடு திரும்பியபோது, அப்படக்காட்சி பள்ளியின் வாட்ஸ்அப் குழு உட்பட, இணையத்தில் வெகுவாகப் பரவி, பாராட்டுச் செய்திகள் குவிந்தன.
நான்கு பிள்ளைகளுக்குத் தாயான திருவாட்டி ஜனோரா, இனம், சமயம் பாராது பள்ளியிலுள்ள எல்லாக் குழந்தைகளையும் தம் பிள்ளைகளைப் போலவே கருதுகிறார்.
அவர் மிகச் சிறந்த ஆசிரியர் எனக் குறிப்பிட்ட ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியை எம். கோகிலாம்பாள், அவரை எண்ணிப் பெருமைகொள்வதாகவும் சொன்னார்.
சக ஆசிரியை ஆர். சங்கரியின் கருத்தும் அதனை ஒத்திருந்தது.
“இதற்குமுன் இந்தியக் குழந்தைகளுடன் பணியாற்றியிராததால் ஜனோராவிற்குச் சற்று சிரமமாக இருக்கலாம் என முதலில் கவலைப்பட்டேன். ஆனால், அது தவறு என உணர்த்தினார் ஜனோரா. ஒரு வாரத்திற்குள், இயல்பாகவே குழந்தைகளுடன் அவர் நட்பை ஏற்படுத்திக்கொண்டார்,” என்று திருவாட்டி சங்கரி புகழாரம் சூட்டினார்.