பண்டா அச்சே: இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியை ஆசிய மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டும் நினைவுகூர்ந்தனர்.
2004 டிசம்பர் 26ஆம் தேதி 9.1 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பேரலைகளுடன் உருவான சுனாமி, கரையோரங்களில் வசித்த 220,000 உயிர்களைச் சுருட்டிக்கொண்டு போய்விட்டது.
இந்தோனீசியா தொடங்கி சோமாலியா வரை 14 நாடுகளை சுனாமி சீரழித்தது.
குறிப்பாக, இந்தோனீசியாவின் அச்சே மாநிலத்தில்தான் ஆக அதிகமாக 100,000க்கும் மேற்பட்டோர் சுனாமியால் உயிரிழந்தனர்.
அதனை நினைவுகூரும் விதமாக வியாழக்கிழமை (டிசம்பர் 26) அந்த மாநிலத்தில் உள்ள பைதுர்ரஹ்மான் கிராண்ட் பள்ளிவாசலில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
மாநிலம் முழுவதும் நினைவுச் சடங்குகளும் பிரார்த்தனைகளும் தொடங்குவதற்காக அந்த ஒலி எழுப்பப்பட்டது.
மோசமாகப் பாதிக்கப்பட்ட இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலும் பல பிரார்த்தனைக் கூட்டங்கள் நிகழ்ந்தன.
சுனாமியை நினைவுகூர்ந்த 54 வயது ஆசிரியரான திரு ஹஸ்னாவதி, “எல்லாம் முடிந்துபோய்விட்டது என்று நினைத்தேன்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
சுனாமி சீரழித்த பள்ளிவாசலில் இருந்த அவர், இருபதாண்டு நினைவைக் கொண்டு வந்தார்.
“அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. காலையில் நாங்கள் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து, சிரித்து மகிழ்ந்துகொண்டு இருந்தோம். திடீரென்று நிகழ்ந்த பேரிடர் எல்லாவற்றையும் அழித்தது. அதனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது,” என்று அவர் கூறினார்.
சுனாமியில் சிக்கி உயிரிழந்த ஏறத்தாழ 14,000 பேரின் சடலங்கள் புதைக்கப்பட்ட அச்சே மாநிலத்தின் யுலீ லெயு கல்லறையில் வியாழக்கிழமை ஒன்றுகூடிய பலரும் கண்ணீர் சிந்தினர்.
மாநிலத்தின் சில கிராமங்களிலும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, மாநிலத் தலைநகர் பண்டா அச்சேயில் சமூகப் பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கடற்கரைகளில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடிக்கொண்டு இருந்தபோது 30 மீட்டர் வரை உயரமாக எழுந்த சுனாமிப் பேரலையில் அவர்கள் சிக்கினர்.
இந்தியப் பெருங்கடலைச் சுற்றிலும் புல்லட் ரயிலைக் காட்டிலும் இருமடங்கு வேகமாக அடுத்தடுத்து பேரலைகள் தோன்றின.
தாய்லாந்தில் சுனாமியால் உயிரிழந்த 5,000க்கும் மேற்பட்டோரில் பாதிப்பேர் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள். அங்கு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பான் நம் கெம் கிராமத்தில் வியாழக்கிழமை நினைவுப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
உயிரிழந்தோரின் உறவினர்கள், சுனாமி அலையைப் போல வளைந்து இருந்த சுவர் ஒன்றில் மலர்களையும் மாலைகளையும் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
தமது அக்காவையும் உறவுப் பெண் ஒருவரையும் சுனாமியில் பறிகொடுத்த நாபாபோன் பகாவான், 55, என்னும் பெண்மணி ஒவ்வோர் ஆண்டும் அஞ்சலி செலுத்த அங்கு வருவதாகக் கூறினார்.
“காலம் பறந்தோடினாலும் நினைவுகள் அவ்வளவு வேகமாக அழிந்துவிடவில்லை,” என்று அவர் கூறினார்.