‘ஏஐ ஏஜன்ட்’ ஊடுருவல்: ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை
ஒப்பன்ஏஐ, ஆந்திரோபிக் நிறுவனங்களின் ‘ஏஐ ஏஜன்ட்’கள் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்பட்டது குறித்து அதிகாரபூர்வமான தகவல்களைக் கோரியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம். அந்த ‘ஏஐ ஏஜன்ட்’கள் மற்ற இணையத்தளங்களுக்குள் அனுமதி இல்லாமல் ஊடுருவியுள்ளன. இணையத் தாக்குதல்களை நடத்தக்கூடிய ‘ஏஐ’ மாதிரிகளை இணையத் தொடர்பில்லாமல் பாதுகாப்பாக தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் எனக் கவனிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெஸ்லாவின் பறக்கும் கார்
அறிவியல் புனைவுத் திரைப்படங்களில் பார்த்திருக்கக்கூடியது போன்ற பறக்கும் காரை, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இலான் மஸ்க் சில நாள்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தினார். ‘ரோட்ஸ்டர்’ என்று அழைக்கப்படும் அந்தக் காரில் இரண்டு பேர் பயணம் செய்யலாம். அந்தக் கார் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் 60 மைல் (ஏறத்தாழ 96.56 கிலோமீட்டர்) வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டது. மேலும் அந்த காரில் ‘ஏர் ஜெட்கள்’ உள்ளதால் அதனால் சில நொடிகளுக்குப் பறக்கவும் முடியும்.
இன்டெல் 'நோவா லேக்’
இன்டெல் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ‘நோவா லேக்’ கணினிச் சில்லுகள் இந்த ஆண்டு வெளியாகும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் மேசைக்கணினிக்குரிய புதிய ‘சிபியூ’ கட்டமைப்பையும் அது கொண்டுவரவுள்ளது. ‘நோவா லேக்’ சிறந்த கணினி செயல்திறனை வழங்கும் என்று கூறப்படுகிறது.
பிரச்சினையை ஒப்புக்கொண்ட மெட்டா
பயனர்களின் அனுமதியின்றி, அவர்களின் உரையாடல்களை மெட்டாவின் அறிவார்ந்த கண்ணாடிகள் பதிவு செய்துள்ளன. இந்தப் பிரச்சினையை மெட்டா நிறுவனம் உறுதிப்படுத்தியதோடு, அது தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஆயினும், இந்தப் பிரச்சினை எதனால் ஏற்பட்டது என்பதை நிறுவனம் விளக்கவில்லை.
மக்களை ரகசியமாகப் பதிவுசெய்யும் திறன் கொண்டவை அறிவார்ந்த கண்ணாடிகள். இதுகுறித்து ஏற்கெனவே கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பங்குச் சந்தையில் ஜியோ
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படும் ஜியோ, இந்தியப் பங்குச் சந்தையில் களமிறங்குகிறது . ஒரு பங்கின் விலை ரூ.1,065 முதல் ரூ.1,119 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பங்குகள் மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு ஜியோ நிறுவனத்தின் கடன்களை அடைப்பதற்கும், மின்னிலக்க, 5ஜி, செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளுக்கும் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
