தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொழில்நுட்பம், நல்வாழ்விற்கு ஜோகூர் அறிவார்ந்த நகரத் திட்டம் முன்னுரிமை: ஜோகூர் உள்கட்டமைப்பு குழுமத் தலைவர்

2 mins read
42cd7201-9064-42d3-915f-fbee49df1e3a
ஜோகூர் பாருவில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) நடந்த ஜோகூர் புத்தாக்கத் தினம் 2025: மின்னிலக்க மாற்றம், அறிவார்ந்த ஜோகூருக்கான செயற்கை நுண்ணறிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜோகூர் உள்கட்டமைப்பு குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மகத்சிர் அசிஸ் (நடுவில்). - படம்: மலாய் மெயில்

ஜோகூர் பாரு: அறிவார்ந்த நகரங்களை உருவாக்குவதில் ஒரு முன்மாதிரி மாநிலமாகத் திகழ்வதற்கான பாதையில் ஜோகூர் சென்றுகொண்டிருப்பதாகச் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 2) ஜோகூர் உள்கட்டமைப்பு குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மகத்சிர் அசிஸ் தெரிவித்தார்.

மேலும், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத் திட்டத்திற்கேற்ப அந்நகரங்கள் கட்டமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஜோகூர் பாருவில் நடந்த ஜோகூர் புத்தாக்கத் தினம் 2025: மின்னிலக்க மாற்றம், அறிவார்ந்த ஜோகூருக்கான செயற்கை நுண்ணறிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜோகூர் அந்நிலையை எட்ட மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பும் உத்திப்பூர்வ தொழில்துறை நிறுவனங்களின் ஆதரவும் தேவை என அவர் குறிப்பிட்டார்.

“பொருளியல் வளர்ச்சி, சமூக நல்வாழ்வு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் அறிவார்ந்த உள்கட்டமைப்பை ஒருங்கிணைப்பதிலும் அறிவார்ந்த கட்டடங்களை உருவாக்குவதிலும் கூடுதல் கவனம் தேவை.

“அறிவார்ந்த நகரங்களை உருவாக்குவது, உள்கட்டமைப்பு கட்டுமானம் ஆகியவற்றை எவ்வாறு மாற்றியமைப்பது குறித்து தொழில்துறை நிறுவனங்களும் மத்திய, மாநில அரசுகளும் ஆராய்ந்து வருவதை நாம் அறிவோம்.

“அறிவார்ந்த நகரத்தைச் சேர்ந்த சில பகுதிகள் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத் திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்படும்,” என்றார் திரு மகத்சிர் அசிஸ்.

ஜோகூரில் அறிவார்ந்த நகரங்களின் மேம்பாடு மின்னிலக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் நீடித்த நிலைத்தன்மை, பாதுகாப்பு மக்களின் நல்வாழ்வு ஆகிய முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கியது என அவர் எடுத்துரைத்தார்.

“திட்டமிடப்பட்ட அறிவார்ந்த உள்கட்டமைப்பில் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு, சிக்கனத் திறன்மிக்க எரிசக்தி நிர்வாகம், பிக் டேட்டா (Big Data) அடிப்படையில் அரசாங்கச் சேவைகள் ஆகியவை அடங்கும்” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்