245 மி. பிட்காய்ன் திருட்டு; குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய இளையர்

2 mins read
bbbbabc8-62c2-42c7-b09e-677a19c20738
வீர் இந்தியாவில் பிறந்தவர் என்றும் அவர் 2010ஆம் ஆண்டு அமெரிக்கா வந்தார் என்றும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. - படம்: ஏபி

நியூயார்க்: அமெரிக்காவின் வா‌ஷிங்டன் பகுதியில் இணைய மோசடி மூலம் 245 மில்லியன் டாலர் மதிப்புள்ள 4,100 பிட்காய்ன் (Bitcoin) மின்னிலக்க நாணயங்களைத் திருடியதாக இந்திய இளையர் ஒருவர் ஒப்புக்கொண்டார்.

வீர் சேத்தல் என்னும் அந்த 19 வயது ஆடவர், அமெரிக்க நாட்டவரான ஜீன்டைல் செரானோ மற்றும் மலோன் லாம் என்னும் சிங்கப்பூரர் ஆகியோருடன் இணைந்து குற்றச்செயலில் ஈடுபட்டார்.

இந்நிலையில், வீர் தமது கூட்டாளிகளான செரானோ, லாமுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க நீதிமன்றத்தின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிட்காய்ன்களைத் திருடியபிறகு வீரும் அவரது நண்பர்களும் தலைமறைவாகினர். மேலும் அவர்கள் சொகுசு கார்கள், வீடுகள் என ஆடம்பரமாக செலவு செய்தனர்.

திருட்டு சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு வீரின் பெற்றோர் கடத்தப்பட்டனர். கடத்தல்காரர்கள் வீரிடம் பெரும் தொகை எதிர்பார்த்துக் கடத்தலில் ஈடுபட்டனர். பின்னர் அந்தக் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர், வீர்ரின் பெற்றோர் விடுவிக்கப்பட்டனர்.

வீர், இதுபோன்று 50க்கும் மேற்பட்ட இணைய மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும் லாம் உள்ளிட்ட 13 பேர் உலக அளவில் இணைய மோசடிமூலம் கிட்டத்தட்ட 510 மில்லியன் டாலருக்கு அதிகமான மின்னிலக்க நாணயங்களைத் திருடியதாக விசாரணையில் தெரியவந்தது.

வீருக்கு 19 முதல் 24 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அவருக்கு 500,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. வீர் இந்தியாவில் பிறந்தவர் என்றும் அவர் 2010ஆம் ஆண்டு அமெரிக்கா வந்தார் என்றும் நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்