கோலாலம்பூர்: மலேசிய நிலப் பொதுப் போக்குவரத்து அமைப்பு விரைவுப் பேருந்துகளில் மின்னூட்ட முனைகளின் பயன்பாட்டுக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது.
பேருந்து ஒன்றில் மின்சாரம் பாய்ந்து இளையர் ஒருவர் மாண்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கான விசாரணை முடிவுறும் வரை, அந்தத் தடை நடப்பில் இருக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கூறினார்.
“தற்போதைக்கு, மின்னூட்ட முனைகளைப் பயன்படுத்த அனைத்துப் பேருந்துகளுக்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் பாய்ந்து இளையர் மாண்ட சம்பவத்திற்கான காரணத்தை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம்,” என்று திரு லோக் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 7) தெரிவித்தார்.
அந்தச் சம்பவத்தை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட சிறப்புப் பணிக்குழுவுக்கு அதன் தொடர்பில் அறிக்கை வெளியிட 14 நாள்கள் காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அந்த விசாரணையின் கண்டுபிடிப்புகள் அறிவிக்கப்படும் என்றும் ஆலோசனைக்காக எரிசக்தி ஆணையம் நாடப்பட்டுள்ளது என்றும் திரு லோக் தெரிவித்தார்.
“சிறப்புப் பணிக்குழு அறிக்கையை நிறைவுசெய்ததும், வழக்கமான செயல்பாட்டு நடைமுறைகளை அமைச்சு மறுஆய்வு செய்ய வேண்டுமா, பேருந்துகளில் மின்னூட்ட முனைகளின் பயன்பாட்டை அனுமதிக்க வேண்டுமா என்பதன் தொடர்பில் எரிசக்தி ஆணையத்துடன் இணைந்து பணிபுரிய நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்றார் திரு லோக்.
பேருந்துகளில் மின்னூட்ட முனைகளுக்கான பாதுகாப்புச் சோதனைகளை உள்ளடக்க அமைச்சு வழக்கமான செயல்பாட்டு நடைமுறைகளை மறுஆய்வு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
பினாங்கு சென்ட்ரலில் நவம்பர் 2ஆம் தேதி மாலை 6 மணிவாக்கில் விரைவுப் பேருந்து ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த 18 வயது இளையர் சுயநினைவின்றிக் காணப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அந்த இளையர் பேருந்தில் கைப்பேசியை மின்னூட்டம் செய்தபோது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்ததை அடுத்து, அந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.