இளையர், தோழி இருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

2 mins read
சைபர்ஜெயா பல்கலைக்கழகக் கொலை
e7fca835-feca-4086-a78f-4c8a2dda4af1
எம். ஸ்ரீ தர்வியன், டி. தினேஸ்வரி இருவரும் செப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர். - படம்: மலாய் மெயில்
multi-img1 of 2

செப்பாங்: ஜூன் மாதம் சைபர்ஜெயாவில் பல்கலைக்கழக மாணவி மணிஷாப்ரீத் கவுர் அகாரா கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் 19 வயது ஆண், பெண் இருவர் மீது வியாழக்கிழமை (ஜூலை 10) செப்பாங்கில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

ஜூன் 23 அன்று பெர்சியாரான் மல்டிமீடியாவின் முத்தியாரா வில் சைபர்ஜெயாவின் புளோக் A-யில் மணிஷாப்ரீத்தைக் கொலை செய்ததாக முதல் குற்றவாளியான எம். ஸ்ரீ தர்வியன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதி கைரத்துல் அனிமா ஜெலானி முன் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தாம் புரிந்துகொண்டதைக் குறிக்க தர்வியன் தலையசைத்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஸ்ரீ தர்வியனுக்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி தண்டனையாக விதிக்கப்படக்கூடும்.

அதே நீதிமன்றத்தில், இரண்டாவது குற்றவாளியான டி. தினேஸ்வரி மீது, அதே இடத்தில், அதே தேதியில் கொலைக்குத் துணை புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், தினேஸ்வரிக்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும். மேலும் அவர் பிரம்படிக்கு ஆளாக நேரிடலாம்.

கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், குற்றம் சாட்டப்பட்ட இருவரிடமிருந்தும் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

ஸ்ரீ தர்வியன், தினேஸ்வரி இருவருக்காக வழக்கறிஞர்கள் எம். மனோகரன், முகமது பஹாருதீன் முகமது ஆரிஃப் ஆகியோர் முறையே முன்னிலையானார்கள்.

மணிஷாப்ரியத்தின் குடும்பத்தினருக்காக வழக்கறிஞர் ராஜ்பால் சிங் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டதைக் கண்காணித்தார்.

இவ்வழக்கு செப்டம்பர் 11ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்துக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்