சிங்கப்பூரின் வடகிழக்கு கரையோரம் அருகே அமைந்துள்ள தெக்கோங் தீவு, ராணுவத்தின் பயிற்சித் தேவைகளைப் பூர்த்திசெய்ய விரிவாக்கம் செய்யப்படும் எனத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (மார்ச் 3) அறிவித்தார்.
சிங்கப்பூர் ஆயுதப்படையின் அடிப்படை ராணுவப் பயிற்சியின் இருப்பிடமாக உள்ள தெக்கோங் தீவை நில மீட்புப் பணிகள் மூலம் விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
தற்காப்பு அமைச்சின் செலவினத் திட்டங்களை வெளியிட்ட டாக்டர் இங், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடம்பெறும் விரிவாக்கப் பணிகள், ராணுவ வீரர்களுக்கும் போர் வாகனங்களுக்குமான பயிற்சி இடமாக விளங்கும் என்றார்.
இதற்கிடையே, ராணுவப் பயிற்சிகளுக்காக ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் சிங்கப்பூர் ஆயுதப்படையால் பயன்படுத்தப்படும் ஷோல்வாட்டர் பே பயிற்சியிடமும் புதிய, மேம்பட்ட வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பொதுவான பாதுகாப்புப் பிரச்சினைகளைக் கையாள மற்ற நாடுகள் உடனான பங்காளித்துவ உறவுமுறையை வலுப்படுத்துவதற்கான தேவையையும் டாக்டர் இங் வலியுறுத்தினார்.
அந்த வகையில், இந்தோனீசியாவுடன் சிங்கப்பூர் கொண்டுள்ள தற்காப்பு ஒத்துழைப்பு உடன்பாடு 2024 மார்ச் முதல் நடப்பில் இருந்து வருவதாக அவர் சொன்னார்.
பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கும் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த சந்திப்பையும் டாக்டர் இங் குறிப்பிட்டுப் பேசினார்.
சிங்கப்பூர் ஆயுதப்படைக்கும் இந்தோனீசிய தேசிய ஆயுதப்படைக்கும் இடையே கூடுதல் ராணுவ ஒத்துழைப்புக்காக இரு தலைவர்களும் ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.