கணவனைச் சங்கிலியால் கட்டிப்போட்டு அடித்து உதைத்த பெண் (காணொளி)

கணவனைச் சங்கிலியால் கட்டிப்போட்டு அடித்து உதைத்த பெண் (காணொளி)

2 mins read
0c4bbd88-2ce7-443a-a29c-5884fe5c2637
சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருந்த பட்டி நரசிம்மா. - காணொளிப்படம்

ஹைதராபாத்: சொத்துப் பிரச்சினைக்காகப் பெண் ஒருவர் தன் கணவனைச் சங்கிலியால் வீட்டில் கட்டிப் போட்டு, மூன்று நாள்களாக அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பட்டி நரசிம்மா, 50. இவருக்கும் இவருடைய மனைவி பரதம்மாவிற்கும் இடையே சொத்து விற்பது தொடர்பில் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நரசிம்மாவின் பெயரில் இருந்த நிலத்தை விற்பது தொடர்பில் அவர்களுடைய இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் அவ்வப்போது சண்டையிட்டு வந்தனர்.

பரதம்மா பெயரிலிருந்த நிலத்தில் நரசிம்மா வீடு கட்டினார். தன் பெயரில் இருக்கும் நிலத்தை விற்றுப் பணமாக்கி, வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை அடைத்துவிடலாம் என்று நரசிம்மா கூறினார்.

அதனைத் தொடர்ந்து, வீட்டிற்குள் பிரச்சினை எழ, நரசிம்மா வீட்டைவிட்டு வெளியேறி தனியே வசித்து வந்தார்.

இந்நிலையில், புவனகிரி மாவட்டத்தில் தன் கணவர் இருப்பதை அறிந்த பரதம்மா, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியன்று தன் பிள்ளைகளுடன் அங்கு சென்று, அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார். பின்னர் தன் வீட்டிலேயே ஓர் அறைக்குள் அவரைச் சங்கிலியால் கட்டிப் போட்டு, மூன்று நாள்களாக அடித்து உதைத்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனைத் தங்கள் கைப்பேசிகளில் ரகசியமாகப் படம்பிடித்த உள்ளூர்வாசிகள், முன்னாள் மாவட்ட நிர்வாக உறுப்பினர் ஒருவர் மூலம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதனையடுத்து, நரசிம்மாவின் வீட்டிற்குச் சென்ற காவல்துறை, அவரை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது.

பின்னர் பரதம்மா மீதும் அவரின் குழந்தைகள்மீதும் காவல்துறை வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்