ஈப்போ: மலேசியாவின் ஜலான் சிக்குஸ்-சுங்கை லாம்பாமில் செவ்வாய்க்கிழமை (மே 13) காலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒன்பது மத்திய கலகத் தடுப்புப் பிரிவு (எஃப்ஆர்யு) அதிகாரிகள் பலியாயினர்.
அதன் தொடர்பிலான விசாரணையில் ஒத்துழைக்க 60க்கும் மேற்பட்ட தனிபர்களின் வாக்குமூலங்களைக் காவல்துறை பதிவுசெய்யும் என்றும் தி ஸ்டார் ஊடகம் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்த எஃப்ஆர்யு உறுப்பினர்கள், விபத்தில் ஈடுபட்ட லாரியை நடத்தும் நிறுவனம் ஆகிய தரப்புகளுக்கு அழைப்பு விடுக்கும் என்று லோவர் பேராக் காவல்துறைத் தலைவரான துணை ஆணையர் பாக்ரி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.
எஃப்ஆர்யு அதிகாரிகள் இருந்த வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து நேர்ந்தது.
அந்த விபத்தில் ஈடுபட்ட லாரியில் போதைப்பொருள் ஏதும் காணப்படவில்லை என்று பேராக் மாநில தலைமை இன்ஸ்பெக்டர் ஆயுப் கான் மைதின் பிட்சய் செவ்வாய்க்கிழமை (மே 13) கூறினார் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.
“(ஓட்டுநர்) லாரியில் ‘கெட்டும்’ என்ற போதைப்பொருள் வைத்திருந்தார் என்று வதந்திகள் இருந்தன. ஆனால், நாங்கள் ஒன்றும் காணவில்லை. போதைப்பொருள் இல்லாததை சீறுநீர் பரிசோதனை உறுதிப்படுத்தியது,” என்று திலோக் இந்தானில் உள்ள பேராக் காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
கெட்டும், மூலிகை மருந்துகளில் பயன்படுத்தப்படும் தாவர வகை. சில நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க கெட்டும், மூலிகை மருந்தாகப் பயன்படுத்தப்படுவதுண்டு. அதேவேளை, அதைத் தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்புண்டு, அதற்கு அடிமையாகும் சாத்தியமும் உள்ளது.
கெட்டும், மலேசியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது.
விபத்தில் சம்பந்தப்பட்ட லாரியின் 45 வயது ஓட்டுநருக்குக் குற்றப் பின்னணி இருந்ததாக திரு ஆயுப் சொன்னார். போதைப்பொருள் தொடர்பான விவகாரமும் அதில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
எனினும், அவர் மீதான அனைத்து வழக்குகளுக்கும் நீதிமன்ற விசாரணை நடந்துவிட்டதாகவும் அவருக்கான தீர்ப்புகள் அளிக்கப்பட்டுவிட்டதாகவும் திரு ஆயுப் குறிப்பிட்டார்.
சந்தேக நபர் புதன்கிழமை (மே 14) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.