பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சில பகுதிகளில் வரும் மாதங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைத் தாண்டக்கூடும் என்பதால், தீவிரமடைந்து வரும் எல் நினோ வானிலை நிகழ்வை எதிர்கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று வானிலை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் பருவநிலை நிபுணரான பேராசிரியர் பிரெடோலின் தாங்காங், எல் நினோ நிகழ்வு நடப்பாண்டு இறுதியில் உச்சமடைந்து 2027 தொடக்கத்தில் பலவீனமடையும் என்று கணித்துள்ளார்.
புவி வெப்பமயமாதல், தற்போதைய வெப்ப நிலவரம் காரணமாக, இவ்வாண்டு அல்லது அடுத்த ஆண்டு வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டாக அமையக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
1997-98 மற்றும் 2015-16 காலகட்டத்தை விட இது தீவிரமாக எல் நினோ நிகழ்வாக உருவெடுக்க சாத்தியள்ளது. மலேசியாவில் இதுவரை தொடர்ந்து 37 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பநிலை பதிவாகவில்லை என்றாலும், வரும் மாதங்களில் 40 டிகிரி செல்சியசைத் தாண்டும் அபாயம் உள்ளது.
ஜூன், ஜூலையில் வழக்கத்தை விட அதிக மழை பெய்தபோதிலும், எல் நினோ காரணமாக கனமழை, வெள்ளப்பெருக்கு போன்ற தீவிர வானிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
தெற்கு சுமத்ரா, மேற்கு கலிமந்தான், தெற்கு சரவாக் ஆகிய பகுதிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அதிக மழையையும் வெள்ள அபாயத்தையும் சந்திக்க நேரிடும். அதேவேளையில், வடக்கு சரவாக், சாபா பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி காட்டுத்தீ, புகைமூட்ட அபாயம் அதிகரிக்கும்.
நீடித்த வெப்பமும் வறட்சியும் குடிநீர் ஆதாரங்கள், விவசாய உற்பத்தி, உணவுப் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரத்தைப் பாதிக்கக்கூடும்.
எல் நினோ நிகழ்வு, மேகங்கள் உருவாவதைக் குறைத்து சூரியக் கதிர்வீச்சை அதிகரிக்கும் என்று மலாயா பல்கலைக்கழகத்தின் வானிலை நிபுணரான பேராசிரியர் அஜிசான் அபு சமா கூறினார்.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், அக்டோபர் முதல் டிசம்பர் வரை கிழக்குக் கரையில் மழைப்பொழிவு 10 முதல் 20 விழுக்காடு வரை குறையக்கூடும். சாபா, சரவாக்கில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மழை குறையும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தீபகற்ப மலேசியாவின் வடபகுதியில் வெப்பநிலை 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம்.
எனவே, நீர் ஆவியாதல் அதிகரிக்கும் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்திற்கு வீட்டு உபயோகத்திற்கான குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்ய அணைகளில் தண்ணீரைக் சேமித்து வைக்குமாறு பேராசிரியர் அஜிசான் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.


