ஜார்ஜ் டவுன்: பினாங்கில் எந்தவொரு கோயிலும் வழிபாட்டுத் தலங்களும் வலுக்கட்டாயமாக இடிக்கப்படவில்லை என அம்மாநில முதல்வர் சாவ் கோன் இயாவ் தெரிவித்தார்.
மேலும், உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காகவோ அல்லது தனியார் நிலங்களில் கட்டப்பட்டிருந்தாலோ, இஸ்லாமியச் சமயம் சாராத வழிபாட்டுத் தலங்களை இடமாற்றம் செய்வதற்கு மாநில அரசு எப்போதும் சுமுகமான தீர்வையே நாடி வருவதாகவும் அவர் கூறினார்.
பினாங்குத் திறன் மேம்பாட்டு நிலையத்தில் உற்பத்தி சார்ந்த திட்டங்களுக்கான செயற்கை நுண்ணறிவையும் அதைப் பாதுகாப்பான முறையில் சோதனை செய்வதற்கான களத்தையும் (AI Sandbox) செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) அவர் தொடங்கிவைத்தார்.
அதற்குப் பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கூறியவற்றைப் பினாங்கு முதல்வர் தெரிவித்தார்.
மேலும், “பினாங்கில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. பொருத்தமான மாற்று இடங்களைக் கண்டறிந்து, வழிபாட்டுத் தலங்களை இடமாற்றம் செய்வதற்கான தீர்வுகளை நாங்கள் வைத்திருக்கிறோம்,” என்றார் அவர்.
மேம்படுத்தப்பட வேண்டிய நிலங்களில் வழிபாட்டுத் தலங்கள் அமைந்திருந்தால், கண்டிப்பாக மாற்று இடத்தை மேம்பாட்டாளர்கள் கண்டறிய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அந்த வழிபாட்டுத் தலம் இடமாற்றம் செய்யப்படுவதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளை மாநில அரசு விதிப்பதாக அவர் கூறினார்.
பினாங்கில் பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிவரும் வழிபாட்டுத் தலங்கள் இன்னும் இருப்பதைத் திரு சாவ் ஒப்புக்கொண்டார்.
“தற்போதுள்ள பழைய கட்டமைப்புகளை நாங்கள் பொறுத்துக்கொள்கிறோம். இருப்பினும், சட்டவிரோதமாகப் புதிய கட்டடங்கள் கட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சிக்கல் மேலும் வளராமல் இருக்க, எங்கும் புதிய வழிபாட்டுத் தலங்கள் உருவாகாமல் இருப்பதை அமலாக்கத்துறை உறுதி செய்யும் என்றும் பினாங்கு முதல்வர் தெரிவித்தார். மேலும், “வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள நிலம் மேம்பாட்டுப் பணிகளுக்காகவோ அல்லது உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவோ தேவைப்படவில்லை என்றால், அவற்றை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் தேவை ஏற்படும்பட்சத்தில், இடமாற்றத்திற்கான நிலங்கள் கண்டிப்பாக வழங்கப்படும்,” என அவர் கூறினார்.

