கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள பிள்ளைப் பராமரிப்பு நிலையங்கள், குழந்தைகளுக்கான வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்துமாறு பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சர் நான்சி ஷுக்ரி அழைப்புவிடுத்துள்ளார்.
தற்போது மலேசியாவின் பல பகுதிகளில் வெப்பம் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகளின் உடல்நலம் கருதி பிள்ளைப் பராமரிப்பு நிலையங்களுக்கு அமைச்சர் நான்சி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிகமான வெப்பநிலை இருக்கும்போது பிள்ளைகள் எளிதாகப் பாதிக்கப்படலாம் குறிப்பாக மூன்று வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
பிள்ளைப் பராமரிப்பு நிலையங்களில் உள்ள பிள்ளைகள் நிழலான இடங்களில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் நான்சி குறிப்பிட்டார்.
பெற்றோரும் பிள்ளைகளின் வெளிப்புற நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே மலேசியாவின் சமூக மேம்பாட்டுத் துறை வெப்பத் தாக்குதல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட 4,800 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மோசமான நிலையில் காற்றுத்தரம்
இந்நிலையில், மலேசியாவின் நான்கு பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளது. புத்ராஜெயாவில் காற்று சுகாதாரக் குறியீடு 150யை நெருங்கியது.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) கிள்ளான் பள்ளத்தாக்கு, நெகிரி செம்பிலான் பகுதிகளில் காற்றுத் தரம் ஆபத்தான நிலையில் இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல் ஜென்ஜாரோம், செரம்பான், நிலாய் ஆகிய பகுதிகளில் காலை 10 மணிவாக்கில் காற்றுத் தரக் குறியீடு 100க்கு மேல் சென்றது.
கடந்த இரண்டு நாள்களாகவே புத்ராஜெயாவில் காற்றுத் தரம் மோசமாக உள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
கோலாலம்பூர், கிளாங், பெட்டாலிங் ஜெயா ஆகிய பகுதிகளில் காற்றுத் தரம் ஓரளவு சீராக இருந்தது.
மலேசியாவில் மார்ச் மாதம் முதல் விளைநிலங்களில் எரிக்கும் சம்பவங்கள் கூடியுள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.

